காவிரி மேலாண்மை ஆணையத்தால் தண்ணீர் பெற முடியாது ஆ.ராசா பேச்சு

தற்போது அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தால் தண்ணீர் பெற முடியாது என்று தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா கூறினார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தால் தண்ணீர் பெற முடியாது ஆ.ராசா பேச்சு
Published on

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் குண்டாமணி என்கிற செல்வராஜ் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர்கள் ஆர்.கே.சங்கர், மேனகா மாரியப்பன், தெய்வநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது.

இந்தியா ஜனநாயக நாடு, குடியரசு நாடு, சமதர்ம நாடு, மதசார்பற்ற நாடு, இறையான்மையுடன் விளங்கும் நாடு. இந்த 5 சக்திகளுக்கும் பாதுகாப்பு அரணாக கருணாநிதி விளங்குகிறார். கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின்போது ரூ.100 கோடி நிதியை திரட்டி தந்தவர் கருணாநிதி ஆவார்.

மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் ஆட்சியின்போது வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டபோது, அதற்கு கருணாநிதி உறுதுணையாக இருந்தார். நிபந்தனைகளின் அடிப்படையில் வாஜ்பாய் அரசுக்கு ஆதரவு கொடுத்தவர் கருணாநிதி. 1971-ம் ஆண்டு கருணாநிதி, காவிரி நடுவர் மன்றம் வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். அதன்படி கருணாநிதி ஆட்சியில் 1989-ம் ஆண்டு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இடைக்கால தீர்ப்பாக 205 டி.எம்.சி. தண்ணீர் காவிரியில் திறந்து விட வழிபிறந்தது. ஆனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தால் தண்ணீர் பெற முடியாது.

மருத்துவ படிப்பு தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வால் மாநில உரிமை பறிகொடுக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், மாநில விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் கல்யாணம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com