காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் - டி.டி.வி.தினகரன்

மத்திய அரசு காலம் தாழ்த்துவது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் என சேலம் ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் - டி.டி.வி.தினகரன்
Published on

சேலம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்துவது மத்திய அரசு தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் என சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் அதையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக திரளான தொண்டர்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். இதையடுத்து அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில அவைத்தலைவர் அன்பழகன், புறநகர் மாவட்ட செயலாளரும், அமைப்பு செயலாளருமான எஸ்.கே.செல்வம், முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில்பாலாஜி, செந்தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாநகர், மாவட்ட செயலாளர் எஸ்.இ.வெங்கடாசலம் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ பேசியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு 6 வார காலம் அவகாசம் கொடுத்திருந்தது. ஆனால் மத்திய அரசு நிதானமாக இருந்துவிட்டு தற்போது விளக்கம் கேட்டுள்ளதால் சுப்ரீம் கோர்ட்டே கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் மே 3-ந் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது. கர்நாடகாவில் மே 12-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

இதில் பா.ஜனதா வெற்றி பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கத்தோடு மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இது 8 கோடி தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். ஜனநாயக நாட்டில் உரிமைகளை பெறுவதற்காக ஆர்ப்பாட்டம், மறியல், உண்ணாவிரதம் போன்றவை நடத்தப்படுவது வழக்கம். ஆனால் அதை தமிழக பா.ஜனதாவினர் எள்ளி நகையாடி வருவது கண்டனத்துக்குரியது.

மத்திய அரசு மே 3-ந் தேதி வரை காலம் தாழ்த்தாமல் வெகு விரைவில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஓழுங்கு முறை குழு அடங்கிய செயல்திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். தமிழக அரசு முதுகெலும்பு இல்லாமல் எடுபிடி அரசாக செயல்பட்டு வருகிறது. அதை மாற்றி ஜெயலலிதா அரசு என்பதை நிரூபிக்க வேண்டும். பதவியில் இருக்கின்ற காலம் முடிய போகிறது.

இனியாவது அவர்கள் நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசுக்கு பயப்படாமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும். கட்சி காப்பாற்றப்பட வேண்டும், ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி தமிழகத்தில் வரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு தான் பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் என்னோடு இருக்கிறார்கள்.

சேலத்தை சேர்ந்தவர் எப்படி முதல்-அமைச்சராக தேர்வானார் என்பது மக்களுக்கு தெரியும். பன்னீர்செல்வம் சரியில்லை என்ற பிறகு சசிகலா வேறு யாரையாவது முதல்-அமைச்சராக்கி இருக்கலாம். என்னை கூட அவரது உறவினர் என்ற முறையிலேயே முதல்-அமைச்சராக நியமித்து இருக்கலாம், அல்லது 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரை முதல்-அமைச்சராக்கி இருக்கலாம்.ஆனால் எந்த ஒரு சாதி, மத உணர்வும் இல்லாமல் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை அவர் தேர்வு செய்தார். தமிழக மக்கள் எதை வேண்டுமானாலும் மன்னிப்பார்கள். ஆனால் துரோகத்தை என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள் என அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன், பேச்சாளர் சி.ஆர்.சரஸ்வதி, பகுதி கழக செயலாளர்கள் செங்குட்டுவன், ஜெயகுமார், சித்தானந்தன், கோபால், சார்பு அணி செயலாளர்கள் சுருளிவேல், வேலுமணி, சுப்பிரமணி, சசிகுமார், வின்சென்ட், மகளிர் அணியை சேர்ந்த மகேஸ்வரி, அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com