காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து குரல் கொடுப்போம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து குரல் கொடுப்போம் என வேலாயுதம்பாளையத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து குரல் கொடுப்போம்
Published on

கரூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வேலாயுதம்பாளையம் மலைவீதியில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும்,போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அ.தி.மு.க. சார்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் பற்றி பேசிய நடிகர்கள் ரஜினி, கமல் எங்கே சென்றார்கள் என்றே தெரியவில்லை.

இந்த ஆட்சி ஓரிரு மாதங்களில் முடிந்து விடும், சிறப்பு அமாவாசையில் முடிந்து விடும் என நமது மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் (செந்தில்பாலாஜி) கூறி வருகிறார். இந்த ஆட்சி இன்னும் 36 மாதங்கள் வரைக்கும் நீடிக்கும்.

அடுத்து வருகிற உள்ளாட்சி, பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமரும். எந்த கொம்பனாலும் இந்த ஆட்சியையோ, அ.தி.மு.க.வையோ அசைக்க முடியாது. பிரிந்து சென்றவர்கள் எல்லாம் தாய் கழகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். துரோகியின் பின்னால் இருந்தவர்கள் வருத்த மடைந்து வரத்தொடங்கி விட்டனர்.

விவசாயிகள் கோரிக்கை விடுத்த தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். புகளூர் காவிரி ஆறு, சின்னதாராபுரம் அமராவதி ஆறுகளில் தடுப்பணைகள் கட்டப்படும். நெரூர்-உன்னியூர் இடையே காவிரி ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பின் மாபெரும் வெற்றி பொதுக்கூட்டம் நடத்தப்படும்.

கூட்டத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

காவிரி விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே மத்திய அரசை அ.தி.மு.க. நம்பவில்லை. கடந்த 1974-ம் ஆண்டு தி.மு.க. தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறாமல் இருந்து இருந்தால் அப்போதே இந்த பிரச்சினை முடிந்து இருக்கும்.

தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுத்த பின் தற்போது அ.தி.மு.க. எம்.பி.க்களை ராஜினாமா செய்ய சொல்கிறார் மு.க.ஸ்டாலின். ராஜினாமா செய்வதால் ஒரு பலனும் இல்லை. தி.மு.க. 4 எம்.பி.க்களை மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய சொன்னது உண்டா?. 89 எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய சொல்வாரா?. தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடலாம் என மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். அவரது ஆசை நிறைவேறாது. காங்கிரஸ், தி.மு.க. செய்த ஊழல்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி பிரச்சினையை அ.தி.மு.க.வால் மட்டுமே தீர்க்க முடியும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து குரல் கொடுப்போம். போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கொள்கை பரப்பு துணை செயலாளர் வைகைசெல்வன் கலந்து கொண்டு பேசினார். விவசாய சங்க தலைவர்கள் மகாதானபுரம் ராஜாராம், காந்திபித்தன் உள்ளிட்ட விவசாயிகள் பேசினர்.

கூட்டத்தில் கீதா எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் சிவசாமி, நகர செயலாளர் நெடுஞ்செழியன், முன்னாள் நகர்மன்ற தலைவர் செல்வராஜ், கரூர் தொகுதி முன்னாள் செயலாளர் திருவிகா, எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், அண்ணா தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் பொரணி கணேசன், மாணவர் அணி முன்னாள் மாவட்ட செயலாளர் தானேஷ், காகிதபுரம் பேரூர் கழக செயலாளர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கரூர் ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன் வரவேற்று பேசினார். முடிவில் புஞ்சை புகளூர் பேரூர் கழக செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

முன்னதாக நேற்று காலை கரூரில் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்த போது, காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசிடம் அடிபணிய மாட்டோம். சட்டப்போராட்டத்தின் மூலம் வெல்வோம். சபாநாயகர் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com