காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுத்து தமிழகத்திற்கு உரிய தண்ணீர் பெற்று தரப்படும்

விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுத்து தமிழகத்திற்கு உரிய தண்ணீர் பெற்று தரப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுத்து தமிழகத்திற்கு உரிய தண்ணீர் பெற்று தரப்படும்
Published on

சீர்காழி,

வைத்தீஸ்வரன்கோவில் மேலவீதியில் அ.தி.மு.க. சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் செல்லையன், ஒன்றிய செயலாளர்கள் ராஜமாணிக்கம், ஜெயராமன், நகர செயலாளர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் போகர்ரவி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் ஜெயபால், தலைமை பேச்சாளர் நல்லாற்று நடராசன், எம்.எல்.ஏ.க்கள் பாரதி, பவுன்ராஜ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., தி.மு.க.வை விட்டு பிரிந்து அ.தி.மு.க. தொடங்கிய போது அவருக்கு சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர்கள், வாகன ஓட்டுனர்கள், உழைக்கும் மக்கள் ஆகியோர் தான் எம்.ஜி.ஆருக்கு முதலில் ஆதரவு கொடுத்தனர். அப்போது முதல் உழைக்கும் மக்களின் உயர்வை போற்றும் வகையில் அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் மே தின பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. காவிரி பிரச்சினையை பற்றி பேசுவதற்கு தி.மு.க.விற்கு எந்த தகுதியும் கிடையாது. காவிரி நீர் மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து பேச தகுதி உள்ள ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டும்தான்.தற்போது தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் பொதுமக்களிடம் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து தவறான பிரசாரம் செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் ஏற்கமாட்டார்கள். விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுத்து தமிழகத்திற்கு உரிய தண்ணீர் பெற்று தரப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் நற்குணன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சந்திரசேகரன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் நாகரத்தினம், நகர பேரவை செயலாளர் மணி, கூட்டுறவு சங்க தலைவர்கள் அஞ்சம்மாள், பார்த்தசாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com