காவிரி நீர்த்தேக்க பகுதிகளில் சூறைக்காற்றால் மீன்பிடி தொழில் பாதிப்பு

காவிரி நீர்த்தேக்க பகுதிகளில் சூறைக்காற்றால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்த்தேக்க பகுதிகளில் சூறைக்காற்றால் மீன்பிடி தொழில் பாதிப்பு
Published on

மேட்டூர்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதிகளான பண்ணவாடி, சேத்துக்குளி, கோட்டையூர், மூலக்காடு, புதுவேலமங்கலம் ஆகிய பகுதிகளில் மீன்பிடிப்பதற்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி உரிமம் பெற்றுள்ளனர். மீன்வளத்தை பெருக்கி, மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ஆண்டுதோறும் மேட்டூர் மீன்வளத்துறையின் மூலம் நீர்த்தேக்க பகுதிகளில் கட்லா போன்ற முதல் தர மீன்வகை குஞ்சுகள் லட்சக்கணக்கில் விடப்படுகின்றன.

ஆனால் இந்த மீன்குஞ்சுகள் வளரும் முன்பே சில சமூக விரோதிகள் கருவாட்டிற்காக, குறைந்த ஆயம் கொண்ட வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடிப்பதால் தொடர்ந்து 4, 5 ஆண்டுகளாக மேட்டூர் அணை மீன்வளம் சரிந்துள்ளது.

இதனால் சுவைமிகுந்த மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் மேட்டூர் அணையை வாழ்வாதாரமாக கொண்ட மீனவர்களும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் கட்லா போன்ற முதல் தர மீன்கள் பிடிபடாமல் அரஞ்சான், வாளை போன்ற இரண்டாம் தர மீன்களே சமீபகாலமாக மீனவர்களின் வலைகளில் சிக்குகின்றன.

இவ்வகை மீன்களுக்கு குறைந்த விலை கிடைப்பதால் இந்த மீன்களை பிடிக்க மீனவர்களிடையே ஆர்வம் குறைந்துள்ளது. ஒரு சில மீனவர்கள் தங்களது சொந்த தேவைகளுக்கும், உள்ளுர்வாசிகளின் தேவைகளுக்கும் மட்டுமே தற்போது மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பல மீனவர்கள் மீன்பிடி தொழிலை கைவிட்டு விவசாயம், கட்டுமானம் போன்ற தொழிலுக்கு கூலி வேலைக்கு சென்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக காவிரி நீர்த்தேக்கப்பகுதிகளில் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் வலை விரிக்க இயலாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் நீர்த்தேக்க பகுதிகளில் தண்ணீரில் மூழ்கியுள்ள சிதைந்த பயிர்களின் நடுவே மீனவர்கள் விரித்த வலைகள் சிக்கி சேதமடைவதாலும் மீனவர்கள் வேதனையடைந்து உள்ளனர். இதனால் நீர்த்தேக்க பகுதிகளில் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிப்படைந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com