காவிரி நதிநீர் பிரச்சினை: சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் - விவசாய தொழிலாளர் சங்க துணை தலைவர் அறிக்கை

சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என விவசாய தொழிலாளர் சங்க தஞ்சை மாவட்ட துணை தலைவர் கூறினார்.
காவிரி நதிநீர் பிரச்சினை: சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் - விவசாய தொழிலாளர் சங்க துணை தலைவர் அறிக்கை
Published on

தஞ்சாவூர்,

காவிரி நதிநீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இறுதி தீர்ப்பை உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும் என்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தஞ்சை மாவட்ட துணை தலைவர் வக்கீல் ஜீவக்குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த காவிரி நதிநீர் பிரச்சினைக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று இறுதி தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் டெல்டா பாசன விவசாயிகள் நிம்மதி அடைந்து உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை மத்திய அரசு உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும்.

தமிழகத்திற்கு 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய உத்தரவைக்கூட கர்நாடக அரசு நிறைவேற்றவில்லை. தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்று கூறியவர்கள்தான் கர்நாடக சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளனர். கர்நாடகாவில் உள்ள அரசியல்வாதிகள்தான், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதற்கு தடையாக உள்ளனர். அதே நேரத்தில் கர்நாடக மக்கள், தமிழக மக்களுடன் சகோதரர்களாகவே பழகி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள கீழ்பவானி, மேட்டூர், அமராவதி, கர்நாடகாவில் உள்ள கபினி, ஹேமாவதி, ஹேரங்கி, கிருஷ்ணராஜசாகர், கேரளாவில் உள்ள பாணசுரசாகர் ஆகிய 8 அணைகளின் கட்டுப்பாடு காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வர வேண்டும்.

கடந்த 6 ஆண்டுகளாக காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி நடைபெறவில்லை. சம்பா, தாளடி ஆகியவை பொய்த்துப்போய் விட்டது. எனவே இந்த ஆண்டாவது குறுவை மற்றும் சம்பா, தாளடி ஆகியவை நடைபெறுமா? என்று காவிரி டெல்டா விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். எனவே மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், அனைத்து அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என பலதரப்பினரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று போராடி வந்தனர். 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் மத்திய அரசு உரிய காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பான வழக்கில் வழங்கிய இறுதி தீர்ப்பில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்டு உள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்றாகும். டெல்டா பகுதி மக்களின் சார்பிலும், தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். எனவே இனிமேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com