வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்கும் வகையில் காவிரி- கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்

வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்கும் வகையில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்கும் வகையில் காவிரி- கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்
Published on

செம்பனார்கோவில்,

கடலில் வீணாக கலக்கும் காவிரி நீரை சேமிக்கும் வகையில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணைகள் கட்டாததை கண்டித்து பா.ம.க. சார்பில் நாகை மாவட்டம் செம்பனார்கோவிலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பா.ம.க. மாநில துணை பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். பா.ம.க. மாநில துணை தலைவர் அய்யாசாமி, மாநில வன்னியர் சங்க துணை தலைவர் எம்.ஆர்.ஜெ. முத்துக்குமார், முன்னாள் நிர்வாகி அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன் வரவேற்றார். கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சில வாரங்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது. இதனால் அணையில் இருந்து அதிகஅளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கரைபுரண்டோடி வீணாக கடலில் கலந்தது. இதன் அளவு சுமார் 126 டி.எம்.சி. என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நீரை சேமித்தால் ஒரு ஆண்டிற்கு டெல்டா மாவட்டங்களில் முப்போக சாகுபடி செய்ய முடியும். வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்கும் வகையில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணைகள் கட்டவேண்டும் என இந்த கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இதனை பல ஆண்டுகளாக நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் சமீபத்தில் தமிழக அரசு தடுப்பணை மேற்கண்ட ஆறுகளில் அமைக்கும் வசதி இல்லை எனவும், தடுப்பணை கட்ட போதிய நிதி வசதி இல்லை எனவும் கூறுவது வேதனைக்குரிய விஷயமாக கருதுகிறேன். தமிழக மக்களுக்கு அரசு தரும் இலவசங்களை முற்றிலும் நிறுத்திவிட்டு, அதன் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு தடுப்பணை அமைக்கலாம் என பா.ம.க. சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பூமி வெப்பமயமாதல் மிகவும் ஆபத்தானது என அறிவியல் விஞ்ஞானிகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக கடல் மட்டம் அதிகரித்து உலகில் பல நகரங்கள் அழியக்கூடிய அபாயம் இருப்பதாகவும், அவர்கள் தங்கள் ஆய்வு அறிக்கையில் தெரிவித்து வருகின்றனர். பூமி வெப்பமயமாதலை தடுக்க அதிகளவு மரங்களை நட்டு வளர்க்க வேண்டும்.

இந்திய குடியரசு தலைவருக்கு கிடைக்கும் மருத்துவ வசதி ஏழை மக்களுக்கும் கிடைக்க பா.ம.க. தொடர்ந்து பாடுபடும். இந்தியா பண்பாட்டு சின்னமாக திகழ்ந்து வருகிறது. இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தால்தான் நாடு வளர்ச்சி அடையும். அந்த பண்பாடு கட்டிகாக்கப்படும். சாதி, மத வேறுபாடுகளை முற்றிலும் இல்லாத சமுதாயத்தை படைக்கவே பா.ம.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. நமது டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஷேல் எரிவாயு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்கிறது. விவசாயிகளுக்கு ஏதிராக எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும், அதனை எதிர்த்து பா.ம.க. போராட்டங்களை நடத்தும்.

டெல்டா பகுதியில் விவசாய வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்திட மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும். பெண்கள் நினைத்தால் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டுவரலாம். அந்த மாற்றம்தான் தமிழக முதல்வராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கபடுவது உறுதி. இதற்காக பெண்கள் கட்டாயம் பா.ம.க.விற்கு ஓட்டு போடவேண்டும். மது ஒழிப்பு, தரமான மருத்துவ வசதி, இலவச கல்வி உள்ளிட்டவைகளை கொண்டுவர பா.ம.க. பாடுபடும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.பி. தன்ராஜ். மாநில பொருளாளர் திலகபாமா, உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி உள்பட ஏராளமான பெண்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். முடிவில் பூம்புகார் தொகுதி செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com