மறைமுக தேர்தலின் போது திருச்சுழி யூனியன் அலுவலகம் சூறை: சி.பி.ஐ. விசாரிக்கக் கோரிய வழக்கில் போலீஸ் சூப்பிரண்டுக்கு நோட்டீஸ் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மறைமுக தேர்தலின் போது திருச்சுழி யூனியன் அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் போலீஸ் சூப்பிரண்டு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மறைமுக தேர்தலின் போது திருச்சுழி யூனியன் அலுவலகம் சூறை: சி.பி.ஐ. விசாரிக்கக் கோரிய வழக்கில் போலீஸ் சூப்பிரண்டுக்கு நோட்டீஸ் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

மதுரை,

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி கோட்டைப்பட்டியை சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் திருச்சுழி ஒன்றிய 4-வது வார்டு தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். எனது கட்சி சார்பில் 7 பேர் வெற்றி பெற்றிருந்தனர். நான், கடந்த 11-ந்தேதி நடந்த திருச்சுழி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் போட்டியிட்டேன். எனக்கு எதிராக அ.தி.மு.க.வை சேர்ந்த சிந்துமுருகன் போட்டியிட்டார்.

எனக்கு 7 வாக்குகளும், சிந்து முருகனுக்கு 6 வாக்குகளும் கிடைத்தன. இதனை தேர்தல் அதிகாரி அறிவிக்க முயன்றார். ஆனால் அ.தி.மு.க.வினர் தங்கள் கட்சியை சேர்ந்த சிந்து முருகனைத்தான் ஒன்றிய தலைவராக அறிவிக்க வேண்டும், இல்லையெனில் அலுவலகத்திற்கு உள்ளேயே தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்தனர். ஆனால் இதனை தேர்தல் அதிகாரி ஏற்க மறுத்தார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் டி.எஸ்.பி. தேர்தல் நடந்த அலுவலகத்தை திறந்து விட்டு அ.தி.மு.க.வினருக்கு சாதகமாக செயல்பட்டார். இதனை பயன்படுத்தி அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை ஆளுங்கட்சியினரும், சிந்து முருகன் தலைமையிலான கும்பலும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.

இந்த சம்பவத்தில் ரூ.2 லட்சத்துக்கும் அதிக மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. மேலும், நான் வெற்றி பெற்றதை அறிவிக்க விடாமல் தடுத்துவிட்டனர். அவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனி நடக்க உள்ள தேர்தலில் உரிய பாதுகாப்பு அளிக்கவும், யூனியன் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ. அல்லது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.முடிவில், இதுகுறித்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 6-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com