சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலகத்தை முற்றுகையிட இந்திய மாணவர் சங்கத்தினர் முயற்சி

சென்னை அண்ணா நகரில் சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை தடுத்ததால் போலீசாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலகத்தை முற்றுகையிட இந்திய மாணவர் சங்கத்தினர் முயற்சி
Published on

பூந்தமல்லி,

கடந்த 7ந்தேதி நடைபெற்ற நீட் தேர்வின் போது, தேர்வு எழுத வந்த மாணவர்கள் முழுக்கை சட்டை அணியக்கூடாது, மாணவிகள் கம்மல், தலையில் கிளிப்புகள் அணியக்கூடாது என பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. மேலும் பலத்த சோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதனால் தேர்வு எழுத வந்த மாணவமாணவிகள், அவர்களின் பெற்றோர் மன வேதனை அடைந்தனர்.

இதனால் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், சோதனை என்ற பெயரில் மாணவர்கள் அவமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஏராளமானவர்கள் நேற்று காலை சென்னை அண்ணாநகரில் உள்ள சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

வாக்குவாதம்

ஆனால் மண்டல அலுவலகம் செல்லும் வழிக்கு முன்பாகவே போலீசார் தடுப்புகள் ஏற்படுத்தி முற்றுகையிட வந்த இந்திய மாணவர் சங்கத்தினரை தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் தடுப்புகளை மீறி அவர்கள் செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர், திடீரென போலீசார் ஏற்படுத்தி இருந்த தடுப்புகளை தாண்டி ஓடிச்சென்று கையில் வைத்து இருந்த மை பாட்டிலை தூக்கி சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலகத்தின் பெயர் பலகை மீது வீச முயன்றார். ஆனால் அந்த மை பாட்டில் தவறி அலுவலகத்தின் சுவரில் விழுந்தது.

கைது

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் அவர்களை கைது செய்த போலீசார், வலுக்கட்டாயமாக அவர்களை தூக்கியும், இழுத்தும் சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com