

விடுமுறை தினத்திற்காக காத்திருந்து பாட்டி, தாத்தா, மாமா, அத்தை வீட்டிற்குச் சென்று படிப்பு, இயல்பு வாழ்க்கை என அனைத்தையும் மறந்து, கேளிக்கை, விளையாட்டு, வயல்வெளி, ஆழ்கிணறு, பம்பு செட்டு குளியல், நுங்கு, தென்னந்தோப்பு என்று நாள் ஒரு வீதம் பொழுதொரு மாதிரி கழித்த காலம், கடந்த காலம் ஆகிவிட்டது.
இப்பொழுது அதே கிராமங்களில் வயலில் விளைச்சலும் இல்லை, வாய்க்காலில் நீரும் இல்லை. கொண்டாட யாருமில்லை. ஒன்று, ஊருக்குப் போக விரும்புவதில்லை, போனால் கிராமங்களில் பெரும்பாலான உறவுகள் தொலைக்காட்சி தொடர்களில் தொலைந்து போனதை தேட நேரமில்லை.
கிராமங்களின் நிலைமை இப்படியென்றால் நகரத்தின் நிலைமை இன்னும் மோசம்.
நகர்ப்புறங்களில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் ஒரு பெரிய பிரச்சினை, விடுமுறையில் பிள்ளைகளை யார் பார்த்துக்கொள்வது?
நம் வசதிக்காக தனிக்குடித்தனம் வந்துவிட்டு எந்த உரிமையில் புகுந்த வீட்டார்களை அழைத்து குழந்தைகளை பார்க்கச் சொல்ல முடியும்? அல்லது எத்தனை பேரால் அப்படி அழைத்த உடனே வந்து குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள முடிகிறது?
இதற்கான தீர்வுதான் இந்த கோடைகால வகுப்புகள். காலை 9 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணிவரை ஏதோ ஒரு வகுப்பு. 30 நாட்களில் கையெழுத்துப் பயிற்சி, ஆங்கிலம் பேச பயிற்சி, அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி, ரோபோ உருவாக்கப் பயிற்சி, நீச்சல், கிரிக்கெட், ஓவியம் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
இங்கு வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வேண்டியது பெற்றோர்களே தவிர பிள்ளைகள் அல்ல. நம்முடைய எண்ணங்களை, ஆசைகளை, நோக்கங்களை பிள்ளைகள் மீது திணிப்பது பெருங்குற்றம் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். பிள்ளைகள் ஆசைப்பட்டால் அதற்கான நேரத்தை, மனோ தைரியத்தை, தெளிவை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள்.
ஆனால் அவர்கள்மீது இதனைத் திணித்தால் அதன் எதிர்விளைவுகளை பின்னர் நாம் அறுவடை செய்ய நேரிடும். அவர்கள் எண்ணத்திற்கேற்ப, வழிகாட்டியாக இருந்து அவர்களின் நல்ல நோக்கங்கள் நிறைவேற உறுதுணையாக இருப்பது மட்டுமே பெற்றோரின் கடமை.
கோடை விடுமுறை என்பது ஆங்கிலேய கல்வி முறையின் போது உருவாக்கப்பட்டதே. அதுவரை குருகுல கல்வியில் எல்லா நாட்களுமே செய்முறைப் பயிற்சியோடு தொடர்பிருந்ததால், பயிற்சி முடிந்ததும் அவர்கள் வாழ்க்கைப் பாடத்தை படிக்கச் சென்றுவிடுவர். அந்த அனுபவம் அவர்களை கூட்டுக் குடும்பத்தோடும், சமூகத்தோடும் இணைத்தே வாழப்பழக் கியது.
இன்று நாம் தனிமையிலே இனிமை காண பழகிவிட்டதன் காரணமாக நேரத்தைச் சமாளிக்க பிள்ளைகளை பலிகடா ஆக்கிவிடுகிறோம். எப்படி ஒரு பிள்ளை கீழே விழுந்தால் அருகில் யாரும் இல்லாத பொழுது தானாகவே எழுந்து நடக்கிறதோ அதுபோல இந்த எண்ணங்கள் எல்லாம் இயல்பாக ஏற்பட வேண்டுமே தவிர, நம் கட்டாயத்தினால் அல்ல.
இன்று பெரும்பாலான தனியார் நிறுவனங்களிலும், பொதுத்துறைகளிலும், அரசுத்துறையிலும் எல்.டிசி. எனப்படும் விடுமுறையோடு கூடிய பயணச்செலவு திட்டம் உள்ளது. இதை எத்தனை பேர் உண்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி. இந்த வசதியை உபயோகித்து தமிழகத்திலும், இந்தியாவிலும் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றுவரவேண்டும். இதுபோன்ற பயணங்கள் நம் அறிவை, மனதை விசாலமாக்கப் பயன்படும்.
பலர் பயண விடுப்பு எடுத்துக்கொண்டு அதனை சுற்றுலாவுக்குப் பயன்படுத்துவது இல்லை. அந்தப் பணத்தில் வேறு செலவு செய்பவர்களும் உண்டு.
நம்மை அடுத்த ஓட்டத்திற்கு தயார்ப்படுத்திக்கொள்ள, இழந்த ஆற்றலைப் புதுப்பித்துக்கொள்ள, சிறகை விரித்து இந்த உலகைச் சுற்ற, விடுமுறை காலத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக கடன் வாங்கி ஊர் சுற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஒரு சிறுதொகையை மாதாமாதம் சேமித்து, ஜனவரி மாதம் வந்தவுடன் எந்த இடத்திற்குப் போக வேண்டும் என தீர்மானித்து, அனைத்து ஏற்பாடுகளையும் (பயணச் சீட்டு முதல் தங்கும் இடம், சுற்றி பார்க்க செல்லும் ஊர்தி வரை) செய்துவிட்டு புறப்பட்டால் கோடை காலத்தை இனிமையாக கொண்டாடலாம். அந்த எண்ணங்களை, நிகழ்வுகளை காலம் முழுவதும் நினைத்து மகிழலாம்.
நம் வாழ்க்கையை வகுத்துக் கொள்ள எத்தனை சுதந்திரம் நமக்கு உள்ளதோ, அதே அளவு சுதந்திரம் நம் பிள்ளைகளுக்கும் உள்ளது. கோடைகாலமானால் வியர்வை, அதனால் ஏற்படும் தொற்று, சளி என உடல் உபாதைகளைத் தவிர்க்க நிறைய தண்ணீர், இளநீர், மோர், எலுமிச்சை பழச்சாறு என உடல் சூட்டை குறைக்க வேண்டியதைச் செய்யுங்கள். ஆனால் பிள்ளைகள் விளையாடுவதைத் தடுக்காதீர்கள்.
இந்த விடுமுறையில் நான்கு சுவற்றுக்குள் இல்லாமல் உலக விஷயங்களை அவர்கள் உற்று நோக்க உறுதுணையாக இருங்கள். மின்னணுக் கருவிகளோடும், மொபைல் போனிலும் விளையாடுவதைத் தவிர்த்து கூட்டாக விளையாட அனுமதியுங்கள். அனைத்தையும் பக்குவமாகப் புரியவைத்து, அனைத்திற்கும் நேரம் ஒதுக்கி, நாம் சற்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பவராகவும், உறுதுணை செய்பவராகவும் இருப்போம்.
இன்றைய காலச்சூழலில் பாடச்சுமையில் இருந்து தற்காலிகமாக வெளிவந்தவர்களை பயிற்சி வகுப்பு என அழுத்தாமல் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்போம்.
அவர்கள் சிறகு விரித்துப் பறக்கட்டும். நாம் சிறகாக இல்லாவிட்டாலும் இளைப்பாறும் மரமாக இருந்து கோடையை குதூகலமாக்க அவர்களுக்கு உதவுவோம்.
(நதி ஓடும்...)