

நாமக்கல்,
சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பட்டணம், பச்சுடையாம்பட்டி, பெரியகுளம், துத்திக்குளம், உத்திரகிடிகாவல், நடுக்கோம்பை, வாழவந்திகோம்பை மற்றும் பொம்மசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பட்டணம் ஊராட்சி, சாலையூர் பட்டணம் கிராமத்தில் ரூ.33 ஆயிரம் மதிப்பில் ஜெயக்குமார் என்பவர் நிலத்தில் மழைநீர் தடுப்பு அமைக்கப்பட்டு வரும் பணியினையும், பச்சுடையாம்பட்டி கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு வரும் பணியினையும் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து பச்சுடையாம்பட்டியில் முதல்-அமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் சுதா யோகாநந்தம் என்பவரின் பசுமைவீடு கட்டும் பணியினையும், பெரியகுளம் ஊராட்சி, வடக்கு அருந்ததியர் காலனியில் நீர்உறிஞ்சும் குழிகள் அமைக்கப்பட்டு வரும் பணியை பார்வையிட்டார்.
மேலும் துத்திக்குளத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் நிலத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டு வரும் பணியினையும், துத்திக்குளம் முதல் நைனாமலை வரை ரூ.90 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் கிராம சாலைகள் அமைக்கப்பட்டு வரும் பணியினையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் துத்திக்குளம், உத்திரகடிகாவல், நடுக்கோம்பை, வாழவந்திக்கோம்பை, பொம்மசமுத்திரம் என சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை அப்போது அவர் ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவப்பிரகாசம், முனியப்பன், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.