வர்த்தக மையம், லயோலா கல்லூரியில் கொரோனா வார்டுகளில் இருப்பவர்கள் திடீர் போராட்டம்

வர்த்தக மையம், லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டுகளில் இருப்பவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வர்த்தக மையம், லயோலா கல்லூரியில் கொரோனா வார்டுகளில் இருப்பவர்கள் திடீர் போராட்டம்
Published on

சென்னை,

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலானவர்களுக்கு அறிகுறி இல்லாமல், தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி ஆகிய மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பிவிட்டதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்தவர்களாக கருதப்படுபவர்களும், கொரோனாவுக்கான அறிகுறி இருப்பவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்கள், தங்களுக்கு குளிர்சாதன வசதி செய்து தரப்படவில்லை, மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லவில்லை, அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறி அனைவரும் ஒன்றாக கூடி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு, அங்கு பணியில் இருக்கும் டாக்டர்கள், போலீசார் ஒலி பெருக்கி மூலம் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதேபோல லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் தங்க வைக்கப்பட்டவர்களும் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், நோய் தொற்று இல்லாதவர்களை தனிமைப்படுத்தப்படும் கண்காணிப்பில் இருந்து வீடு திரும்புவதற்கு அனுமதிக்கவேண்டும் என்று கூறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com