மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
Published on

கோவில்பட்டி,

கோவில்பட்டி வள்ளுவர் நகர் 2-வது தெருவில் சுதந்திர போராட்ட தியாகி ஏ.கே.ஜி. நினைவு படிப்பகம் திறப்பு விழா நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி, படிப்பகத்தை திறந்து வைத்தார். முன்னதாக அவர், கோவில்பட்டி-கடலையூர் ரோட்டில் உள்ள அபிராமி முருகன் திருமண மண்டபத்தை திறந்து வைத்தார்.
பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்று வட்டார பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆலையால் ஏராளமானவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் விவசாய நிலங்களும், நீர்நிலைகளும் பயன்படுத்த முடியாத அளவுக்கு கடும் பாதிப்பை அடைந்துள்ளன. எனவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வதற்கு கையூட்டு பெற்றதாக அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் மீது மாநில காவல்துறை விசாரணை நடத்தியது. இதனை சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. எனவே அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து சி.பி.ஐ. விசாரணையை சந்திக்க வேண்டும்.

தமிழக உயர்கல்வித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் நியமனங்களில் ஊழல் மலிந்து விட்டது. அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் சம்பந்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே கவர்னர் அமைத்த விசாரணையை ரத்து செய்து விட்டு, ஐகோர்ட்டு மேற்பார்வையில் புலன்விசாரணை நடைபெற வேண்டும்.

தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வசூலிப்பதை தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் சத்துணவு பணியாளர் நியமனத்தில் இருந்து பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் வரையிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. எனவே தமிழக அரசு ஊழல் தடுப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

பேட்டியின் போது, மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாநில குழு உறுப்பினர் மல்லிகா, நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு, சீனிவாசன், நகர குழு உறுப்பினர் சக்கரையப்பன், கிளை செயலாளர் பாலசுப்பிரமணியன், அபிராமி முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com