தஞ்சை மாவட்டத்தில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு

தஞ்சை மாவட்டத்தில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 8 பேர் கொண்ட மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களிடம் பாதிப்பை விவசாயிகள் இந்தியில் எடுத்துக்கூறினர்.
தஞ்சை மாவட்டத்தில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு
Published on

தஞ்சாவூர்,

புரெவி புயல் மழை காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கும் மேல் தொடர் மழை பெய்தது. இந்த தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின. நெல்மணிகள் முளைத்து காணப்பட்டன. இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின. இது தவிர சோளம், நிலக்கடலை போன்ற பயிர்களும் பாதிக்கப்பட்டன.

மேலும் மழையின் காரணமாக ஆறுகளில் உடைப்புகள் ஏற்பட்டு சாலைகள் பழுதாகி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மத்திய குழுவினர் ஆய்வு

இதன் தொடர்ச்சியாக மத்திய குழுவினர் நேற்று தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் பெரியகோட்டை மற்றும் ஒரத்தநாடு ஒன்றியம் உளூர் ஆகிய பகுதிகளில் மத்திய குழுவின் தலைவர் அஸ்தோஷ் அக்னிகோத்ரி தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

இந்த குழுவில் மத்திய வேளாண்துறை அமைச்சக இயக்குனர் மனோகரன், அதிகாரிகள் பால்பாண்டியன், சுபம் கார்க், ஹர்ஷா, ரணன்ஜாய் சிங், அமித்குமார், மோடி ராம் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இந்த குழுவினர் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, கலெக்டர் கோவிந்த ராவ் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் நெல் மற்றும் இதர பயிர்சேத விவரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மதுக்கூர் மற்றும் ஒரத்தநாடு வட்டாரங்களில் பயிர் சேத விவரங்களடங்கிய புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டனர். அவர்களிடம் கலெக்டர் கோவிந்தராவ் சேத விவரங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

நெல், மக்காச்சோளம், நிலக்கடலை

தஞ்சை மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக சாகுபடி செய்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் 8,550 எக்டேர் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன. இதனால் 10 ஆயிரத்து 859 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 460 எக்டேர் நிலக்கடலை பயிர் சேதமடைந்ததால் 62 விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். 136 எக்டேரில் மக்காச்சோள பயிர் சேதமடைந்ததால் 144 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பயிர்சேத விவரங்கள் குறித்து மத்திய குழுவினர் விவசாயிகளிடம் நேரிடையாக கேட்டறிந்தனர்.

இந்தியில் பேசிய விவசாயிகள்

இதனைத் தொடர்ந்து விவசாயிகள் பாதிப்புக்குள்ளான நெற்பயிரை மத்திய குழுவினரிடம் காட்டினர். அப்போது 2 விவசாயிகள் இந்தியில் பேசினர். அவர்கள் பாதிப்பு குறித்து இந்தியில் மத்தியக்குழுவினருக்கு எளிதில் புரியும் வகையில் எடுத்துரைத்தனர். அதனை கேட்டுக்கொண்ட மத்தியக்குழுவினர், விவசாயிகள் இந்தியில் பேசியதை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

விவசாயிகள் கூறும்போது மழையின் காரணமாக கதிர்விடும் பருவத்தில் இருந்த நெல்மணிகள் அனைத்தும் பதராகி போய்விட்டது. வைக்கோல் மட்டுமே கிடைக்கும். நெல்மணிகள் எதுவும் கிடைக்காது, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். எனவே அரசு எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கினால் பேருதவியாக இருக்கும் என கூறினர்.

இந்தியில் விவசாயிகள் பேசியதை மத்தியக்குழுவினர் ஆர்வத்தோடு கேட்டு, அவர்களிடம் எவ்வளவு மழை பெய்தது, நீலத்தடி நீர் மட்டம் எவ்வளவு உள்ளது என்பது போன்ற விவரங்களை கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டனர்.

ஆய்வின்போது பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. சேகர், வேளாண் கூடுதல் இயக்குனர் கார்த்திகேயன், பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பாலச்சந்தர், வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com