கொரோனா பரவலுக்கு மத்தியில் கர்நாடகத்தில் தொழிற்படிப்புகளுக்கான சி.இ.டி. தேர்வு தொடங்கியது 1.94 லட்சம் மாணவர்கள் எழுதினர்

கொரோனா பரவலுக்கு மத்தியில் கர்நாடகத்தில் என்ஜினீயரிங் உள்பட தொழிற்படிப்புகளுக்கான சி.இ.டி. தேர்வு நேற்று தொடங்கியது. 1.94 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
கொரோனா பரவலுக்கு மத்தியில் கர்நாடகத்தில் தொழிற்படிப்புகளுக்கான சி.இ.டி. தேர்வு தொடங்கியது 1.94 லட்சம் மாணவர்கள் எழுதினர்
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பு 1.20 லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும் 2,200 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு மத்தியில் மாநிலத்தில் என்ஜினீயரிங் உள்பட தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு (சி.இ.டி.) ஜூலை 30-ந் தேதி (அதாவது நேற்று) தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்று கர்நாடக தேர்வாணையம் அறிவித்தது. அதன்படி கொரோனா பீதிக்கு இடையே அந்த பொது நுழைவு தேர்வு கர்நாடகத்தில் நேற்று தொடங்கியது. மாநிலம் முழுவதும் சுமார் 1.90 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் பெங்களூருவில் மட்டும் சுமார் 42 ஆயிரம் அடங்குவர்.

உயர்கல்வித்துறையை நிர்வகிக்கும் துணை முதல்-மந்திரி அஸ்வத்நாராயண், மல்லேசுவரம், சேஷாத்திரிபுரம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தலா ஒரு தேர்வு மையத்திற்கு நேரில் சென்று மாணவர்கள் தேர்வு எழுதுவதை ஆய்வு செய்தார்.

முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, சானிடைசர் திரவம் கொண்டு கைகளை தூய்மைபடுத்துவது போன்ற பணிகளை அவர் ஆய்வு செய்தார். போக்குவரத்து, உயர்கல்வி, போலீஸ் ஆகிய துறைகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பணிகளை அஸ்வத் நாராயண் பாராட்டினார்.

மாணவர்கள் பதிலளித்தனர்

மேலும் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடி, வீட்டில் இருந்து தேர்வு மையங்களுக்கு வருவதற்கு ஏதாவது சிரமம் ஏற்பட்டதா? என்று கேட்டார். அதற்கு மாணவர்கள் தங்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படவில்லை என்று பதிலளித்தனர். மேலும் அஸ்வத் நாராயண், தேர்வு மையங்களில் கொரோனா பரவுவதை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆதங்கப்பட தேவை இல்லை என்றும் கூறினார்.

அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனா பரவல் மற்றும் ஐகோர்ட்டு கூறியுள்ள விதிமுறைகளை தீவிரமாக பின்பற்றி வைரஸ் பரவுவதை தடுக்க தேவையான அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. ஒரு அறையில் 24 மாணவர்கள் அமர வைக்கப்பட்டு உள்ளனர். தேர்வு அறைக்குள் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டுள்ளது.

497 தேர்வு -மையங்கள்

கொரோனா பாதித்த மாணவர்களுக்கு தனியாக அறை ஒதுக்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அரசு செய்துள்ள ஏற்பாடுகளில் எங்கும் எந்த குறைபாடும் ஏற்படவில்லை. மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதுகிறார்கள். மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 94 ஆயிரத்து 356 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

மாணவர்களின் வசதிக்காக மாநிலம் முழுவதும் 497 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் பெங்களூருவில் மட்டும் 83 மையங்கள் இருக்கின்றன. பெங்களூருவில் மட்டும் 40 ஆயிரத்து 200 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள 40 மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்று உள்ளனர். இந்த வைரஸ் பாதித்த மாணவர்களை அவர்களின் வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் ஆம்புலன்சில் அவர்களின் வீட்டுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

கலந்தாய்வு

கொரோனா பீதி காரணமாக 30 ஆயிரம் மாணவர்கள் தங்களின் தேர்வு மையத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த தேர்வு முடிவு வந்த பிறகு கலந்தாய்வு உள்பட அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com