தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு

தலைவர் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு
தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு
Published on

பொள்ளாச்சி

பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் விஜயராணி தலைமை தாங்கினார். துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆணையாளர் மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) ஆனந்த் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.

இதையடுத்து தீர்மானத்தை வாசிக்க தொடங்கும் போது திடீரென்று அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்கள் எந்தவித காரணமும் கூறாமல் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து, ஒன்றிய குழு தலைவர் அறைக்கு சென்று உட்கார்ந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து கூட்டத்தில் இருந்து ஒன்றிய குழு தலைவர், துணை தலைவரும் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஒன்றிய கவுன்சிலர்கள் கூறியதாவது

பவானியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பயிற்சி நடப்பதாக இருந்தது. இதற்கு 3 கவுன்சிலர்கள் இங்கிருந்து புறப்பட்டு பவானிக்கு சென்றனர். அங்கு சென்ற பிறகு கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டதும் திரும்பி வந்தனர். இதற்கிடையில் பயிற்சி ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் வந்தும், கவுன்சிலர்களிடம் தெரிவிக்கவில்லை. இதனால் வீண் அலைச்சல் ஏற்பட்டு உள்ளது.

கிட்டசூராம்பாளையத்தில் ஒன்றிய கவுன்சிலர் நிதி ரூ.3 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் ரிசர்வ் சைட்டில் கட்டும் பணி தொடங்கியது. சமூக ஆர்வலர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் நிதி வீணாகி கிடக்கிறது. மேலும் முடிக்கப்பட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.15 லட்சத்து 75 ஆயிரம் செலவில் சோலார் மின் விளக்கு அமைக்க ஆணை வழங்கப்பட்டு பணி முடிக்கப்பட்டது.

ஆனால் கடந்த மாதம் திடீரென்று அந்த பணி ஆணை ரத்து செய்யப்பட்டது. இதனால் பணி செய்த ஒப்பந்ததாருக்கு நிதி கிடைக்கவில்லை. ஜல் ஜீவன் திட்ட பணிகள் முழுமையாக முடிக்காமல் உள்ளது. ராமபட்டிணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்டிடம் கட்டும் பணி தொடங்காமல் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதில் கூறுவதில்லை. இதனால் ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதுகுறித்து ஆணையாளர் மோகன் கூறுகையில், அரசிடம் இருந்து வந்த உத்தரவை தொடர்ந்து விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் சோலார் மின் விளக்கு அமைக்கும் பணி ஆணை ரத்து செய்யப்பட்டது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com