சாணார்பட்டி ஒன்றியத்தில்: 8 ஆண்டுகளுக்கு பிறகு நெல் சாகுபடி

சாணார்பட்டி ஒன்றியத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சாணார்பட்டி ஒன்றியத்தில்: 8 ஆண்டுகளுக்கு பிறகு நெல் சாகுபடி
Published on

கோபால்பட்டி,

சாணார்பட்டி ஒன்றியம் முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். இந்த பகுதிகளில் தென்னை, கொய்யா, மாமரங்கள் ஏராளமாக உள்ளன. இதுதவிர தண்ணீர் இருக்கும் பகுதிகளில் நெல், கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதிகளில் பருவமழை முறையாக பெய்யவில்லை.

இதனால் சாணார்பட்டி ஒன்றிய பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குளங்கள் வறண்டு கிடந்தன. தென்னை, கொய்யா மரங்களை காப்பாற்ற முடியாமல் கருகி வந்தன. நெல் சாகுபடியும் முற்றிலும் பொய்த்து போனது. இதனால் பசுமையாக காட்சியளித்த வயல்களும் தரிசு நிலங்களாக மாறின.

இந்த நிலையில் கடந்த மாதம் கஜா புயலின்போது சாணார்பட்டி ஒன்றிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டதால் நிரம்பி வழிகின்றன. இதை பயன்படுத்தி இந்த பகுதிகளில் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கோபால்பட்டி, கணவாய்பட்டி, வடுகபட்டி, மணியகாரன்பட்டி, ஆவிளிபட்டி, சில்வார்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் நெல் நடவு பணிகளை தொடங்கியுள்ளனர். ஒரு சில பகுதிகளில் பயிர்கள் வளர்ந்து பச்சைப்பசேலென காட்சியளிக்கிறது. ஒரு சில பகுதிகளில் இன்னும் நடவு பணிகள் நடந்து வருகிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு பருவமழை பரவலாக பெய்துள்ளதால் நெல் சாகுபடி தொடங்கியுள்ளது. தற்போது குளங்களில் உள்ள தண்ணீரை கொண்டு குறைந்த ரக நெல்லை சாகுபடி செய்துள்ளோம். இதன்படி 90 நாட்களில் அறுவடை செய்து விடலாம்.

இதற்காக தண்ணீர் குளங்களில் இருப்பு உள்ளதால் சிக்கல் இருக்காது. இருப்பினும் பெரும்பாலான குளங்களில் மதகுகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. எனவே குளங்களில் உள்ள மதகுகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com