

பெங்களூரு,
பெங்களூரு சிவாஜிநகரில் நகைக்கடை நடத்தி வந்தவர் மன்சூர்கான். இவர் பெங்களூருவின் பிற பகுதிகளிலும் நகைக்கடைகள், மருந்து கடைகள் நடத்தி வந்தார். இதுதவிர பல்வேறு தொழில்களில் அவர் ஈடுபட்டு வந்தார். இவருடைய நிறுவனத்தில் ஏராளமானவர்கள் பணம் முதலீடு செய்தனர். இந்த நிலையில் தன்னிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க் ரூ.400 கோடி வாங்கி கொண்டு தரமறுப்பதால் தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக ஆடியோ ஒன்றை வெளியிட்ட மன்சூர்கான், துபாயில் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கமர்சியல் தெரு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். மேலும் அவரை கைது செய்ய சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் தனது நிறுவனத்தில் முதலீடு செய்த 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களிடம் இருந்து ரூ.1,640 கோடி மோசடி செய்துவிட்டு மன்சூர்கான் துபாயில் பதுங்கியது தெரியவந்தது. மேலும் மன்சூர்கான் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கியது. அத்துடன், சிறப்பு விசாரணை குழுவும், அமலாக்கத்துறையும் தேடப்படும் குற்றவாளியாக மன்சூர்கானை அறிவித்தது. உளவுத்துறை சார்பில் ப்ளு கார்னர் நோட்டீசு வழங்கப்பட்டது.
இந்த மோசடி வழக்கு தொடர்பாக நகைக்கடைகளின் இயக்குனர்கள் 12 பேர் உள்பட மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் விஜய்சங்கர், பெங்களூரு வளர்ச்சி குழும உதவி கமிஷனர் நாகராஜ் உள்ளிட்டவர்களும் அடங்குவர். இருப்பினும் மன்சூர்கானை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
மன்சூர்கானின் வீடு, நகைக்கடைகள் உள்பட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்திய சிறப்பு விசாரணை குழுவினர் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள், வெள்ளிப்பொருட்களையும், முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் மன்சூர்கானின் 100-க்கும் அதிகமான வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன.