

திருச்சி,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சந்திராயன்-2 விண்கலம் மார்ச் மாதம் விண்ணில் ஏவப்படும். அதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விண்கலம் அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை விண்ணுக்கு எடுத்து செல்லும். இதனை விண்ணில் செலுத்தியபிறகு அதில் உள்ள கருவிகள் மூலம் சந்திரனில் இறங்கி அங்குள்ள கல், மண் போன்றவைகளை ஆராய்ச்சி செய்யும். மேலும், அங்கு வேறு ஏதாவது தாதுபொருட்கள் இருக்கிறதா? என்ற சோதனையையும் மேற்கொள்ளும். சந்திராயன்-2 விண்கலம் இந்தியர்களை கொண்டு இந்திய பொருட்களால் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை விண்ணில் ஏவுவதற்கான 4 கட்ட சோதனைகள் இதுவரை முடிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைகள் அனைத்தும் திருப்திகரமாக உள்ளது.
சந்திரனுக்கு ஆட்களுடன் கூடிய விண்கலத்தை அனுப்புவதற்காக ஐ.நா.சபையில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்பட 15 நாடுகளை உள்ளடக்கிய உயர்மட்டக்குழு உள்ளது. இந்த குழுவுடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு சார்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆதித்யா-1 விண்கலம் இன்னும் 4 ஆண்டுகளில் விண்ணில் ஏவப்படும். இதற்கான வரைபடம் மற்றும் வடிவமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு ரூ.500 கோடி வரை செலவாகும். நடப்பாண்டில் 18 ஏவுகணைகளை விண்ணில் செலுத்த இலக்கு நிர்ணயித்து இருந்தோம். ஆனால் 12 ஏவுகணைகளை மட்டும் செலுத்தி உள்ளோம். மேலும் 6 ஏவுகணைகள் தனியார் பங்களிப்புடன் விரைவில் செலுத்தப்படும்.
விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவுடன் இணைந்து பங்கேற்க பல்வேறு நாடுகளும் ஆர்வமுடன் இருக்கின்றன. அதற்கான தகுதிகளை நாம் வளர்த்து கொள்ள வேண்டும். வருங்காலங்களில் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்போடு தனியார்துறை பங்களிப்பும் இருக்க போகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.