அரியலூரில் காவலர் தேர்வில் ஆள் மாறாட்டம்; 3 பேர் கைது

அரியலூரில் காவலர் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து எழுதியவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூரில் காவலர் தேர்வில் ஆள் மாறாட்டம்; 3 பேர் கைது
Published on

உடையார்பாளையம்,

தமிழகம் முழுவதும் காவலர் பணி மற்றும் தீயணைப்பு வீரர்கள் பணிக்கான எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் தத்தனூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியிலும் தேர்வு நடந்தது. இதில் தேர்வு எழுத 3 ஆயிரத்து 690 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்த நிலையில், 2 ஆயிரத்து 972 பேர் நேற்று தேர்வு எழுதினர்.

தேர்வினை திருச்சி மண்டல போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். அப்போது கன்னியாகுமரி மாவட்டம் கல்குளத்தை சேர்ந்த தேவபிரசாந்த் (வயது 23) என்பவருக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து கடலூர் மாவட்டம், சி.அரசூரை சேர்ந்த ரகுபதி (34) என்பவர் தேர்வு எழுதியதை போலீசார் கண்டறிந்தனர்.

3 பேர் கைது

இதனையடுத்து ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய ரகுபதி, தேர்வு எழுத சொன்ன தேவபிரசாந்த் மற்றும் உடந்தையாக இருந்த அவரது அண்ணன் சந்தோஷ்(34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், காவலர் தேர்வு எழுதுவதற்காக தேவபிரசாத்திடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பேசி அதில், ரூ.1 லட்சத்தை பெற்றுக்கொண்டு ரகுபதி தேர்வு எழுதியுள்ளார். மீதமுள்ள ரூ.50 ஆயிரம் தொகையை தேர்வு எழுதிவிட்டு பெற்றுக்கொள்வதாக கூறியுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் ரகுபதி பார்ப்பதற்கு வயது அதிகமானவர் போல் தெரிந்ததால், சந்தேகம் அடைந்து, போலீசார் விசாரணை நடத்தியதில் சிக்கி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com