

திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் சிறுமலை அமைந்துள்ளது. 18 கொண்டை ஊசி வளைவுகளுடன் உள்ள சிறுமலையில் ஆண்டு முழுவதும் இதமான சீதோஷ்ணம் நிலவும். இதனால் சிறுமலைக்கு திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். எனவே சிறுமலையில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சிறுமலை சூழல் மேம்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வனத்தை பாதுகாத்தல் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் சிறுமலைக்கு சுற்றுலா வரும் வாகனங்களுக்கு பாதுகாப்பு கட்டணம் வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் முதல் சிறுமலை ஊராட்சி சார்பில் சிறுமலைக்கு சுற்றுலா வரும் மோட்டார் சைக்கிளுக்கு ரூ.20, 4 சக்கர வாகனங்களுக்கு ரூ50, கனரக வாகனங்களுக்கு ரூ100, பொக்லைன் எந்திரம், போர்வெல் வாகனங்களுக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூல் செய்யப்படுகிறது.