மானை வேட்டையாட முயன்ற சிறுத்தைப்புலி

முதுமலையில் மானை வேட்டையாட சிறுத்தைப்புலி முயன்றது. இதனை வாகன சவாரி சென்ற சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
மானை வேட்டையாட முயன்ற சிறுத்தைப்புலி
Published on

மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் காண வேண்டும் என்பதற்காக வனத்துறை சார்பாக தினந்தோறும் வாகன சவாரி, யானை சவாரி போன்றவைகள் இயக்கபட்டு வருகிறது.

காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே இந்த சவாரிகள் இயக்கபட்டு வந்த நிலையில் தற்போது சுற்றுலா பயணிகள் வருகைக்கு ஏற்ப காலை முதல் மாலை வரை வாகன சவாரி மட்டும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. இதனால் முதுமலையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனிடையே முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் வாழ தேவையான அனைத்து சூழ்நிலைகளும் சிறப்பாக உள்ளது. இதனால் அவற்றின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக முதுமலைக்குள் வாகன சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் அதிகமாக புலிகளையும், சிறுத்தைப்புலிகளையும் கண்டு ரசித்து வருகின்றனர். இது சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தெப்பகாடு வனப்பகுதிக்குள் வாகன சவாரி சென்ற சில சுற்றுலா பயணிகள் சிறுத்தைப் புலி ஒன்றை பார்த்துள்ளனர். சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் வனப்பகுதியை விட்டு வாகன சவாரி செல்லும் சாலையின் ஓரத்திற்கு வந்த அந்த சிறுத்தைப்புலியை கண்டு சுற்றுலா பயணிகள்கூச்சலிட்டனர்.

அதனையடுத்து வாகனத்தை நிறுத்திய ஓட்டுனர் சிறுத்தைப்புலியை சத்தம் போடாமல் அமைதியாக கண்டு ரசிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். அதனையடுத்து சுற்றுலா பயணிகளும் அமைதியாக சிறுத்தைப்புலியை புகைப்படம் எடுத்தனர். அப்போது வாகனத்தின் அருகில் வந்த அந்த சிறுத்தைப் புலி பதுங்கி பதுங்கி சாலையை கடந்து சென்றது. அதனை ஆச்சர்யத்துடன் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து கொண்டிருந்த நேரத்தில் அந்த பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மானை நோக்கி சிறுத்தைப்புலி வந்தது.

ஆனால் அந்த மான் தப்பி ஓடியது. இந்த காட்சிகளை கண்ட சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தனர். பொதுவாக புலி, சிறுத்தைப்புலிகளை எளிதில் காண முடியாது என்ற நிலை இருந்து வரும் நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் சிறுத்தைப்புலி ஒன்று மானை வேட்டையாட முயன்றதை சுற்றுலா பயணிகள் சிறிது நேரம் கண்டு ரசித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com