சென்னை கோட்டை - பூங்காநகர் இடையே தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து மின்சார ரெயிலை கவிழ்க்க சதி என்ஜின் டிரைவர் சாமர்த்தியத்தால் பெரும்விபத்து தவிர்ப்பு

சென்னை கோட்டை - பூங்காநகர் இடையே தண்டவாளத்தில் மின்சாரரெயிலை கவிழ்ப்பதற்காக மர்மநபர்கள் பாறாங்கல்லை வைத்திருந்தனர். என்ஜின் டிரைவர் பாறாங்கல்லை பார்த்து அகற்றியதால் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னை கோட்டை - பூங்காநகர் இடையே தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து மின்சார ரெயிலை கவிழ்க்க சதி என்ஜின் டிரைவர் சாமர்த்தியத்தால் பெரும்விபத்து தவிர்ப்பு
Published on

சென்னை,

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி நேற்று முன்தினம் இரவு மின்சார ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் கோட்டை நிலையத்தை கடந்து பூங்காநகர் ரெயில்நிலையம் நோக்கி சென்றது.

அப்போது தண்டவாளத்தில் ஏதோ ஒரு பொருள் கிடப்பதை ரெயில் என்ஜின் டிரைவர் காமராஜ் பார்த்தார். ஆபத்தை உணர்ந்த அவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். பின்னர் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பார்த்தார்.

அங்கே தண்டவாளத்தில் 2 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட பாறாங்கல் கிடந்ததை கண்டு டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். இதை பார்த்த சக பயணிகளும் பதற்றம் அடைந்தனர். உடனடியாக அந்த பாறாங்கல்லை அங்கிருந்து அப்புறப்படுத்தி அந்த ரெயிலை அங்கிருந்து இயக்கி சென்றார்.

பின்னர் இதுகுறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே கட்டுப்பாட்டு பிரிவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு கிடந்த பாறாங்கல்லை ஆய்வு செய்தனர். இந்த கல்லை திட்டமிட்டே யாரோ வந்து போட்டு சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் கூறுகையில், பாறாங்கல்லை தண்டவாளத்தில் வைப்பது என்பது நிச்சயம் நாசவேலையாகவே கருதமுடியும். இந்த சதி வேலையில் ஈடுபட்டவர்களை கண்டறியும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றனர்.

சென்னையில் தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து மின்சார ரெயிலை கவிழ்க்கும் நோக்கில் அரங்கேறி இருக்கும் இச்சம்பவம் நேற்று பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதேவேளை ஆபத்தை உணர்ந்து சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்தி பெரும் விபத்து நடக்காமல் செய்த என்ஜின் டிரைவர் காமராஜை அதிகாரிகள் உள்பட அனைவரும் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com