

செங்குன்றம்,
பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் நீர் தேக்கங்களில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் மற்றும் நெமிலி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து பெறப்படும் தண்ணீர், வீராணம் ஏரியில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது.
இது தவிர ஆரணி, கொசஸ்தலை ஆற்று படுகைகளில் அமைந்துள்ள சிறுவானூர், மோவூர், கீழானூர், புல்லரம்பாக்கம், காரணை மேலானூர், மாகரல், வெள்ளியூர் பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்தும் தண்ணீர் பெறப்படுகிறது.
இருப்பினும் கோடை காலங்களில் ஏரிகள் வற்றி விடுவதால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஊத்துக்கோட்டை அருகே உள்ள கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரிகளை ஒன்றிணைத்து ரூ.330 கோடியில் பிரமாண்ட அணை கட்டப்படும் என்று அறிவித்தார்.
அதன்பேரில் 1485 ஏக்கர் நிலப்பரப்பில் நீர்தேக்கம் அமைக்கும் பணிகள் 2013-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டன. கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படும் தண்ணீர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சத்தியவேடு காட்டில் பாயும் ஓடைகளின் தண்ணீர் கண்ணன்கோட்டை நீர் தேக்கத்தில் சேமித்து வைக்க உள்ளனர்.
இதற்காக தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்ட் அருகே உள்ள ஜங்காலபள்ளி பகுதியில் கிருஷ்ணா நதி கால்வாயின் குறுக்கே மதகுகள் அமைக்கும் பணி மற்றும் சத்தியவேடு காட்டில் உள்ள ஓடைகளின் தண்ணீர் புதிய அணைக்கு வரும் விதமாக கால்வாய் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன.
இதுமட்டுமல்லாமல் ஜங்காலபள்ளி மதகுகளில் இருந்து கண்ணன்கோட்டை வரை கிருஷ்ணா நதிநீர் கொண்டு செல்ல கால்வாய் அமைக்கப்பட்டது.
மேலும் 7.15 கிலோ மீட்டர் தூரம் வரை கரைகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றன. இந்த கரைகள் மீது வாகனங்கள் வந்து செல்லும் விதமாக சாலை போடும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று முடிக்கப்பட்டன.
அணை கட்ட நிலம் தந்த விவசாயிகள் சிலர் அரசு இழப்பீடு தொகை பெறாமல் இருந்தனர். அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் 5 மாதங்களுக்கு முன்னர் பணிகள் தொடங்கப்பட்டன.
மேலும் சில விவசாயிகள் இழப்பீடு தொகை தாமதமாக வழங்கியதற்கு வட்டியாக ரூ.40 கோடி செலுத்த வேண்டும் என்ற போர்கொடி தூக்கி உள்ளனர். இதனால் 1.50 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளன.
வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த வட்டி பணத்தை விவசாயிகளுக்கு செலுத்தி விட்டால் மீதம் உள்ள பணிகளை 20 நாளில் முடிக்க வாய்ப்பு உள்ளது.
இதுபோக இறுதி கட்ட பணிகள் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தில்லைக்கரசி, உதவி செயற்பொறியாளர் ரவிசந்திரன், உதவி பொறியாளர்கள் பாபு, தனசேகர், சுந்திரம், பத்மநாபன் ஆகியோரின் தலைமையில் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகள் முடிந்தால் 1.50 டி.எம்.சி தண்ணீர் கண்ணன்கோட்டை நீர் தேக்கத்தில் சேமித்து வைத்து கொள்ளலாம்.
இப்படி சேமித்து வைக்கப்படும் தண்ணீரை சென்னை குடிநீர் வாரியம் சார்பில் அணை அருகே ரூ.100 கோடியில் நிறுவி உள்ள நீர் உறிஞ்சி மையத்தில் இருந்து நீரை உறிஞ்சி ராட்சத பைப்புகள் மூலம் 12 கிலோ மீட்டர் தூரத்தில் ஊத்துக்கோட்டை அருகே அம்பேத்கர் நகரில் உள்ள கிருஷ்ணாநதி கால்வாயில் தண்ணீரை விட உள்ளனர். அங்கிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் பாய்ந்து செல்லும்.
விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்து விட்டால் சில நாட்களுக்குள் அணை கட்டும் பணிகள் முழவதுமாக முடிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தில்லைகரசி ஊத்துக்கோட்டை அருகே நடைபெறும் பணிகளை பார்வையிட்ட பின் நிருபர்களிடம் தெரிவித்தார்.