கடைமடை பகுதிகளுக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் - அமைச்சர் காமராஜ் தகவல்

கடைமடை பகுதிகளுக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
கடைமடை பகுதிகளுக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் - அமைச்சர் காமராஜ் தகவல்
Published on

சுந்தரக்கோட்டை,

மன்னார்குடியில் உள்ள ஹரித்ராநதி தெப்பக்குளத்திற்கு பாமணி ஆற்றில் இருந்து தண்ணீரை கொண்டு செல்லுவதற்காக அமைக்கப்பட்ட மின்பம்பு பழுதானதால் புதிய மின்பம்பு அமைக்கப்பட்டது. அதனை நேற்று அமைச்சர் ஆர்.காமராஜ் இயக்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டெல்டா பகுதிகளுக்கு குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுப்பது மட்டுமல்லாமல் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் வகையில் நகர, பேரூர் மற்றும் கிராம பகுதிகளிலுள்ள ஏரி, குளம், குட்டைகளில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அந்த வகையில் தான் மன்னார்குடியில் உள்ள பெரியகுளங்களில் ஒன்றான ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் நீர் நிரப்பும் வகையில் மின்பம்பு அமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஆற்றில் தண்ணீர் வரும்போது மழையும் பெய்தால் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு சுலபமாக சென்றடையும். ஆனால் தற்போது போதுமான மழை இல்லாத காரணத்தால் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடைமடை பகுதிகளுக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் அடுத்த ஓரிரு நாட்களில் கடைமடை பகுதிகளுக்கு முழுமையாக தண்ணீர் செல்ல தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மன்னார்குடி உதவி கலெக்டர் பத்மாவதி, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பொன்.வாசுகிராம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் குமார், நகராட்சி ஆணையர் விஸ்வநாதன், நகராட்சி பொறியாளர் இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com