முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் எந்த ரகசியமும் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் எந்த ரகசியமும் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் எந்த ரகசியமும் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
Published on

தூத்துக்குடி,

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று காலை தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது, ஒரு நொடிப்பொழுது கூட வீணாக்காமல் தமிழகத்தின் நலன் சார்ந்த திட்டங்களை ஆய்வு செய்து, அதனை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். லண்டன் கிங்ஸ் ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்து ஏர்ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடத்தி உள்ளார்.

அமெரிக்காவில் உள்ள கால்நடை பண்ணையையும் ஆய்வு செய்து உள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவது போன்று முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் எந்த ரகசியமும் இல்லை.

மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம்தான் எப்போதும் ரகசியமாக இருந்து வருகிறது. பல்வேறு நாடுகளுக்கு அவர் செல்வார். எதற்காக செல்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. நாங்களும் அதனை நாகரிகம் கருதி கேட்பது இல்லை. எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் தனது வெளிநாட்டு பயணங்களை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆனால் அவர்தான் ரகசியமாக சென்று வருகிறார். தற்போது அதை மறைத்து விட்டு முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்துகிறார். மக்கள் இதனை ஏற்க மாட்டார்கள்.

தமிழகத்தில் சினிமா தியேட்டர்களில் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். இதுதொடர்பாக ஏற்கனவே 3 தியேட்டர் உரிமையாளர்களை அழைத்து பேசி உள்ளோம். அவர்களும் இதற்கு இசைவு தெரிவித்து உள்ளனர். படிப்படியாக இந்த முறை அமல்படுத்தப்படும்.

முதலில் மாநகராட்சி மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் நடைமுறைப்படுத்தப்படும். அதன்பிறகு ஏ.சி. தியேட்டர்களில் அமல்படுத்தப்படும். தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள 1000 தியேட்டர்களிலும் ஆன்லைன் மூலமாகத்தான் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற முறை விரைவில் அமலுக்கு வரும்.

தூத்துக்குடி மாவட்டம் நிச்சயமாக ஒரே மாவட்டமாகத்தான் இருக்கும். இங்கு 10 தாலுகாக்கள், 12 ஒன்றியங்கள், 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. எனவே தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டமாகத்தான் நீடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com