முதல்-மந்திரி பட்னாவிஸ் பதவி நீக்கம் இல்லை - நிதின் கட்கரி உறுதி

கட்சி பக்கபலமாக இருப்பதால் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவி நீக்கம் செய்யப்படமாட்டார் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்தார்.
முதல்-மந்திரி பட்னாவிஸ் பதவி நீக்கம் இல்லை - நிதின் கட்கரி உறுதி
Published on

நாக்பூர்,

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் சில தினங்களுக்கு முன் அளித்த பேட்டியில், மராத்தா சமுதாயத்தினரின் வன்முறை சம்பவங்கள் காரணமாக பா.ஜனதாவின் தலைமை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், அவரை மாற்றிவிட்டு வேறு ஒருவரை அந்த பதவியில் அமரவைக்க போவதாகவும் கூறி சர்ச்சையை கிளப்பினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பா.ஜனதாவின் மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான நிதின் கட்கரி நேற்று அளித்த பேட்டியில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மராத்தா இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார். மராட்டிய அரசு இதுதொடர்பான அனைத்து பிரச்சினைகளிலும் சுமுக தீர்வு காணும். அதுவரை மக்கள் அமைதி காக்கவேண்டும் என்றார்.

மேலும் சஞ்சய் ராவுத்தின் கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், ஊடகங்கள் இதுகுறித்து ஏன் இவ்வளவு விவாதம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்று புரியவில்லை. கட்சியில் அனைவரும் தேவேந்திர பட்னாவிசுக்கு பக்கபலமாக உள்ளனர். எனவே அவரை பதவியில் இருந்து நீக்குவது குறித்து கட்சியில் எந்த பேச்சும் இல்லை.

சிலர் மக்களிடம் சாதியம் மற்றும் மதவாதம் போன்ற நஞ்சுகளை கலக்க விரும்புகின்றனர். முதல்-மந்திரி பட்னாவிசின் தலைமையிலான அரசில் மராத்தா உள்பட அனைத்து சமூகத்தினருக்கும் நியாயம் கிடைக்கும் என நான் முழுமையாக நம்புகிறேன் என்றார்.

மேலும் உள்கட்டமைப்பு, நீர்ப்பாசனம், முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் பட்னாவிஸ் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com