

ஈரோடு,
முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் உயரிய சிகிச்சை பெற முடியும் என்பதால் பொதுமக்கள் இந்த திட்டத்துக்கான அடையாள அட்டை பெற விண்ணப்பித்து வருகிறார்கள்.
ஈரோடு தாலுகாவுக்கு உள்பட்ட பகுதி மக்களுக்கு முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்ட அடையாள அட்டைக்கு ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதற்காக எப்போதும் பொதுமக்கள் இந்த அலுவலகத்தில் வந்து கூடுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக பொதுமக்கள் வருகை இல்லாமல் இந்த மையம் வெறிச்சோடி கிடந்தது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்டு இருப்பதால் மீண்டும் பொதுமக்கள் கூடத்தொடங்கி உள்ளனர். நேற்று காப்பீட்டு திட்ட அடையாள அட்டை பெற ஏராளமானவர்கள் வரிசையில் நின்றனர். ஆனால் அவர்கள் ஓய்வாக உட்கார்ந்து இருக்க அங்கு வசதிகள் இல்லை. முதியோர்களும், குழந்தைகளுடன் வந்தவர்களும் மிகவும் சிரமத்துடன் நின்று கொண்டே இருந்தனர்.
தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டியது அவசியம். எனவே இதுபோன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் இடைவெளி விட்டு அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.