முதல்-அமைச்சர் 22-ந்தேதி தூத்துக்குடி வருகை: முன்னேற்பாடு பணிகளை - அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந்தேதி தூத்துக்குடி வருவதையொட்டி, அதுதொடர்பான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று ஆய்வு செய்தார்.
முதல்-அமைச்சர் 22-ந்தேதி தூத்துக்குடி வருகை: முன்னேற்பாடு பணிகளை - அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடிக்கு வருகிறார். இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு நடைபெற்று வரும் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியுடன் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா பரிசோதனை மையங்களை ஏற்படுத்தி, அதிகளவில் பரிசோதனை செய்த மாநிலம் தமிழகம்தான். 86 சதவீதத்துக்கும் மேலானவர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். சென்னையில் அதிக தொற்று ஏற்பட்டபோது, 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அமைச்சர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் சென்னையில் கொரோனா தோற்று கட்டுப்படுத்தப்பட்டது.

அதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழகத்திலேயே இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. கொரோனா தொற்றும் தற்போது குறைந்துள்ளது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந்தேதி மாலை தூத்துக்குடிக்கு வருகிறார். 5 மாதங்களாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது, அரசின் திட்டங்கள் முடங்கக்கூடாது என்ற வகையில், ஆய்வு கூட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. ஆகையால் இந்த ஆய்வு கூட்டம் மக்களுக்கு பயனளிக்கக்கூடிய கூட்டமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, சின்னப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com