முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருப்பூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டது

முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருப்பூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டது.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருப்பூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டது
Published on

திருப்பூர்,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன் முடிந்த பணிகளையும் தொடங்கி வைக்கிறார். இதற்காக திருப்பூருக்கு வரும் முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் அ.தி.மு.க. மாநகர் மாவட்டம் மற்றும் திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, பல்லடம் சட்டமன்ற தொகுதிகள் சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இன்று ஊட்டியில் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு கார் மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பூர் வருகிறார். இதற்காக திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் இருந்து பல்லடம் காரணம்பேட்டை வரை முதல்-அமைச்சர் கார் செல்லும் வழித்தடத்தில் ரோட்டின் இருபுறமும் அ.தி.மு.க. கட்சிக்கொடி கட்டப்பட்டுள்ளது. இதுபோல் மாநகரில் பல இடங்களில் முதல்-அமைச்சரை வரவேற்று அலங்கார கொடி வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் முதல்- அமைச்சருக்கு வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்தந்த பகுதிகளில் சிறிய அளவில் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் தமிழக அரசின் சாதனைகளை விளக்கி மாநகரில் பல இடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. அதுபோல் முதல்-அமைச்சரை வரவேற்று விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆய்வு கூட்டத்தை முடித்து விட்டு முதல்-அமைச்சர் மாலை 6.30 மணிக்கு திருப்பூரில் இருந்து பல்லடம் ரோடு வழியாக கோவைக்கு செல்கிறார். இதனால் முதல்-அமைச்சரை பொதுமக்கள் வரவேற்கும் வகையில் ரோட்டின் இருபுறமும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்-அமைச்சரின் வருகையையொட்டி திருப்பூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்காக கலெக்டர் அலுவலகத்தின் முன்புறம் மேடை அமைக்கப்படுகிறது. அந்த இடத்தை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேற்று காலை உயர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். இதுபோல் ஆய்வு கூட்டம் நடைபெறும் கூட்ட அரங்கை தயார் செய்யும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி கலெக்டர் அலுவலகம் வர்ணம் தீட்டப்பட்டு அலங்கார விளக்குகளால் பொலிவுபடுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com