சிக்கமகளூருவில் 4 கால்கள் கொண்ட அதிசய கோழி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்

ஒருசில இடங்களில் அதிசயமாக விலங்கினங்கள் மற்றும் பறவையினங்கள் கூடுதல் கால்களுடனும், குறைவான கால்களுடனும் பிறக்கின்றன.
சிக்கமகளூருவில் 4 கால்கள் கொண்ட அதிசய கோழி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்
Published on

சிக்கமகளூரு,

பொதுவாக விலங்கினங்களுக்கு 4 கால்களும், பறவையினங்களுக்கு 2 கால்களும் இருப்பது இயற்கையின் நியதி. ஆனாலும் ஒருசில இடங்களில் அதிசயமாக விலங்கினங்கள் மற்றும் பறவையினங்கள் கூடுதல் கால்களுடனும், குறைவான கால்களுடனும் பிறக்கின்றன. அதுபோன்று தான், கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் 4 கால்கள் கொண்ட அதிசய கோழி ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

சிக்கமகளூருவை சேர்ந்தவர் இக்பால். இவர் சிக்கமகளூரு டவுன் மல்லந்தூர் ரோட்டில் கோழிக்கடை வைத்துள்ளார். இவர் அங்குள்ள கோழிப்பண்ணைகளில் இருந்து கோழிகளை விலைக்கு வாங்கி வந்து, இறைச்சியாக விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம்போல இக்பால், ஒரு கோழிப்பண்ணையில் இருந்து இறைச்சிக்காக கோழிகளை வாங்கிக் கொண்டு தனது கடைக்கு வந்தார். கோழிகளை இறைச்சிக்காக வெட்டும்போது அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதாவது, 4 கால்களுடன் அதிசய கோழி ஒன்று இருந்தது. இதனை பார்த்து அவர் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தார். அந்த கோழியின் பிரதான கால்களுக்கு பின்புறம் மேலும் 2 கால்கள் இருந்தன. இந்த தகவல் அந்தப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனை கேள்விப்பட்ட அந்தப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் வந்து 4 கால்கள் கொண்ட அதிசய கோழியை பார்த்து சென்றனர்.

இதுகுறித்து கோழிக்கடை உரிமையாளர் இக்பால் கூறுகையில், 4 கால்கள் கொண்ட கோழி பிறந்ததாக நான் இதற்கு முன்பு கேள்வி படவில்லை. இந்த கோழியை இறைச்சிக்காக வெட்டும் போது தான், அது 4 கால்களுடன் இருப்பது தெரியவந்தது. இதனால் மிகுந்த ஆச்சரியமடைந்தேன். ஏராளமான மக்கள் எனது கடைக்கு வந்து கோழியை பார்த்து செல்கிறார்கள். இந்த கோழியை நான் விற்க மாட்டேன். இறைச்சிக்காக வெட்டவும் மாட்டேன். அதனை வளர்க்க முடிவு செய்துள்ளேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com