பல்லடத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண்குழந்தை உயிருடன் குப்பை தொட்டியில் வீச்சு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

பல்லடம் அருகே பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தை உயிருடன் குப்பை தொட்டியில் வீசப்பட்டது. இதையடுத்து மீட்கப்பட்ட அந்த குழந்தைக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிக்சை அளிக்கப்படுகிறது.
பல்லடத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண்குழந்தை உயிருடன் குப்பை தொட்டியில் வீச்சு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
Published on

பல்லடம்

பல்லடம் அருகே பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தை உயிருடன் குப்பை தொட்டியில் வீசப்பட்டது. இதையடுத்து மீட்கப்பட்ட அந்த குழந்தைக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிக்சை அளிக்கப்படுகிறது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

குப்பை தொட்டியில் குழந்தை

கிருஷ்ணகிரியை சேர்ந்த முனிராஜ் மகள் மாணிக்கவள்ளி (வயது 25). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள செரங்காட்டுதோட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் சுத்தம் செய்துவிட்டு குப்பைகளை கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குப்புசாமிநாயுடுபுரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள குப்பை தொட்டியில் போட சென்றுள்ளார்.

குழந்தை அழுகுரல்

அப்போது குப்பை தொட்டியில் இருந்து குழந்தை அழும் குரல் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணிக்கவள்ளி குப்பை தொட்டியை எட்டிப்பார்த்தார். அப்போது துணியில் சுற்றப்பட்ட நிலையில் குழந்தை கிடந்தது. இதையடுத்து அந்த துணியை எடுத்து பிரித்து பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன தெப்புள்கொடி கூட துண்டிக்கப்படாத ஆண் குழந்தை இருந்தது.

இதையடுத்து அந்த குழந்தையை வீட்டிற்கு எடுத்து வந்து, புட்டி பால் அளித்துள்ளார். மேலும் இது குறித்து தனது பெற்றோருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அத்துடன் கிருஷ்ணகிரியில் இருந்து மாணிக்க வள்ளியின் பாட்டி சஞ்சலா, தம்பி புகழேந்தி ஆகியோரை குப்புசாமிநாயுடுபுரத்திற்கு வரவழைத்துள்ளார். அவர்கள் வந்ததும் அந்த குழந்தையை பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஒப்படைத்தனர்.

சிகிச்சை

ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் அந்த குழந்தையை பரிசோதனை செய்தபோது அந்த குழந்தைக்கு ஆசனவாய் (மலத்துவாரம்) இல்லாதது தெரியவந்தது. இதனால் தான் அந்த குழந்தையை பெற்றவர்கள் குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அந்த குழந்தை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும் குப்பையில் வீசப்பட்ட குழந்தை குறித்து மாணிக்கவள்ளி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணிக்கவள்ளியின் மனித நேய செயலை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். மேலும் குழந்தையை வீசிச்சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாயார் யார்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

--------------

பல்லடம் அருகே குப்பைத்தொட்டியில் இ்ருந்து மீட்கப்பட்ட குழந்தையை படத்தில் காணலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com