குழந்தை கடத்தல் பீதியில் தாக்கப்பட்ட மூதாட்டி, குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

வேலூர் அருகே குழந்தை கடத்தல் பீதியில் தாக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
குழந்தை கடத்தல் பீதியில் தாக்கப்பட்ட மூதாட்டி, குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
Published on

வேலூர்,

வேலூரை அடுத்த அ.கட்டுப்புடி கிராமத்தில் கடந்த மாதம் 5-ந் தேதி மூதாட்டி ஒருவர் சுற்றித்திரிந்தார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள், மூதாட்டியை குழந்தை கடந்த வந்தவர் எனக்கருதி மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் அரியூரில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.

இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து 5 பேரை கைது செய்தனர். மேலும் மூதாட்டி யார்? என விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மூதாட்டி தாக்கப்படும் வீடியோ காட்சிகள் மற்றும் மூதாட்டியின் புகைப்படம் வாட்ஸ்-அப் மற்றும் முகநூலில் பரவியது. இதனை கண்ட மூதாட்டியின் தம்பி விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டார். அவர் வேலூர் அருகே பொதுமக்களால் தாக்கப்பட்ட மூதாட்டி சங்கராபுரம் தாலுகா மையனூரை சேர்ந்த தனது அக்காள் மேரிராணி (வயது 62) என தெரிவித்தார். சங்கராபுரம் போலீசார் இதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று மூதாட்டியின் உறவினர்கள் பாகாயம் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் மூதாட்டி மேரிராணிக்கு பழங்கள் வாங்கி கொடுத்து அவரது குடும்பத்தினருடன் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து மேரிராணியின் தங்கை பாத்திமா, தம்பி அந்தோணிராஜ் கூறுகையில், வீட்டில் இருந்த மேரிராணி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திடீரென மாயமானார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எப்படியோ வழிதவறி வேலூருக்கு வந்துள்ளார். வாட்ஸ்-அப்பில் வந்த வீடியோவை பார்த்து அவர் வேலூரில் உள்ளார் என தெரிந்து கொண்டு, இங்கு வந்து மீட்டோம். மாயமான அவர் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கண்ணீர் மல்க கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com