சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர் துணை போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்

சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் வேண்டுகோள் விடுத்தார்.
சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர் துணை போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்
Published on

ஊத்துக்கோட்டை,

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஊத்துக்கோட்டையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ரவிகுமார், காவேரிகிருஷணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியதாவது:-

மனித உயிரிழப்புகளை தடுக்கவே தமிழக அரசு ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வார விழா நடத்துகிறது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விதிகளை பின்பற்றினால் விபத்துகளை தடுக்க முடியும். ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளே விபத்துகளில் அதிகம் உயிர் இழக்கின்றனர்.

ஆகையால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிந்து செல்லவது நல்லது. 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர். செல்போன் பேசிக்கொண்டும், மது அருந்தியவாறும் வாகனம் ஓட்டக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியின் முடிவில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கர் சாலை விதிகளை பின்பற்றுவது பற்றிய துண்டு பிரசுரங்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த பேரணியானது உமாபதி தலைமையிலும், வி.ஆர்.ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த பேரணியை காஞ்சீபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் செங்குட்டுவன், உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமலராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த பேரணியில் உத்திரமேரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மூர்த்தி, முரளி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் நடராஜன் தலைமை தாங்கினார்.

ஆய்வாளர்கள் கருப்பையா, சரவணன், ஞானவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாகைகளை ஏந்தியபடி 300-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து மகேந்திரா சிட்டி வரை ஊர்வலமாக சென்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த ஒரகடத்தில் சாலை பாதுகாப்பு குறித்தும் ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு பேரணி ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் 15-க்கும் மேற்பட்ட போலீசார் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்தபடி வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் பேரணியாக வந்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் 5-க்கும் மேற்பட்ட நாடக கலைஞர்கள் எமதர்மன் உள்ளிட்ட பல்வேறு வேடம் அணிந்து விபத்து குறித்து நடித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com