சித்ரா பவுர்ணமி விழா சண்டி யாகத்துடன் தொடக்கம்

சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா சண்டி யாகத்துடன் தொடங்கியது. இதில் பெண்கள் கலந்துகொண்டு லலிதா சஹஸ்ர நாம குங்குமார்ச்சனை நடத்தினர்.
சித்ரா பவுர்ணமி விழா சண்டி யாகத்துடன் தொடக்கம்
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூரை அடுத்து சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா 25-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. மே 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. இதனிடையே மதுரகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சென்னை கோட்டூர் ஸ்ரீமகாமேரு மண்டலி சார்பில் சிறப்பாக நடத்தப்படும் சித்ரா பவுர்ணமி விழா நேற்று காலை சண்டி யாகத்துடன் தொடங்கியது.

இதனையொட்டி மூலவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு உச்சிகால சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்பாள் உற்சவ சிலை தங்கரத பாதையில் தென்கிழக்கு மூலையில் வைக்கப்பட்டு இருபுறமும் சுமங்கலி பெண்கள் அகண்ட லலிதா சஹஸ்ரநாம குங்குமார்ச்சனை நடத்தினர். உச்சிகாலம்வரை ஸ்ரீ நவாவரண பூஜை, ஸ்ரீசண்டியாகம் நடந்தது. யாகத்தை ஸ்ரீ மதுராம்பிகாநந்த பரஹ்மேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு பிராமணர் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் அய்யர் முன்னிலை வகித்தார். இதில் அனுஷ்டானங்களை கடைபிடித்துவரும் சுமங்கலி பெண்கள் திரளான பேர் கலந்துகொண்டு உலக நன்மைக்காக லலிதா சஹஸ்ரநாம நாமாவளியை பாராயணம் செய்து குங்கும அர்ச்சனை நடத்தினர்.

மாலை மயிலாடுதுறை ராகவனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிநடந்தது. 2-வது கால சண்டியாகம் மாலையில் நிறைவடைந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) சித்ரா பவுர்ணமி விழா விமரிசையாக நடக்கிறது. இதனையொட்டி காலை 8.30 மணி முதல் 11.30 மணிவரை 3-வது கால ஸ்ரீசண்டியாகம் நடக்கிறது. இதில் ஸ்ரீ ப்ரணவானந்த பரஹ்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீமகாமேரு மண்டலி பொறுப்பாளர் சுப்ரமணியன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com