பச்சை தேயிலை மூலம் சாக்லேட் தயாரிப்பு: கோத்தகிரி இளைஞர் சாதனை

பச்சை தேயிலை மூலம் சாக்லேட் தயாரித்து கோத்தகிரி இளைஞர் சாதனை படைத்து உள்ளார்.
பச்சை தேயிலை மூலம் சாக்லேட் தயாரிப்பு: கோத்தகிரி இளைஞர் சாதனை
Published on

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலை விவசாயமே பிரதானமாக இருக்கிறது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் உள்ளனர். ஆனால் பச்சை தேயிலை விலை வீழ்ச்சி, நிரந்தரம் இல்லாத விலை நிர்ணயம், தேயிலைத்தூள் விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால் தேயிலை தொழிலை சார்ந்து உள்ளவர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே ஏல மையங்களில் தேயிலைத்தூளுக்கும், தொழிற்சாலைகளில் பச்சை தேயிலைக்கும் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதனால் பெரும்பாலான சிறு விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலை மூலம் குடிசை தொழிலாக கிரீன் டீ தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு சந்தையில் நல்ல விலை கிடைப்பதால் மகளிர் சுய உதவிக்குழுவினரும் கிரீன் டீ மற்றும் ஆர்தோடக்ஸ் டீ தயாரித்து விற்பனை செய்து கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர்.

இதற்கிடையே தேயிலைத்தூளில் இருந்து ஒயின் தயாரிக்கும் முயற்சியில் கோத்தகிரி பகுதி இளைஞர்கள் வெற்றி கண்டனர். இமாச்சலபிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களில் சி.டி.சி., ஆர்தோடக்ஸ், கிரீன் டீ போன்ற ரக தேயிலைத்தூளில் இருந்து ஒயின் தயாரிக்கப்படுகிறது.

இதேபோன்று கோத்தகிரி பகுதியிலும் ஒயின் தயாரிக்கப்பட்டு வருகிறது. சாதாரண பழ வகைகளில் இருந்து ஒயின் தயாரிப்பது போலவே தேயிலைத்தூளில் இருந்து ஒயின் தயாரிப்பது எளிய முறையாக உள்ளது. சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்தில் நல்ல வரவேற்பை பெறும் என்பதாலும், குடிசை தொழிலாகவே அதிக முதலீடு இன்றி கணிசமான லாபம் ஈட்ட முடியும் என்பதாலும் டீ ஒயின் தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். ஆல்கஹால் இல்லாத டீ ஒயின் நினைவு பிறழ்தல், சளி, இதய வால்வு பிரச்சினை போன்ற நோய்களை குணப்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் டீ ஒயினை பெரிய அளவில் சந்தைப்படுத்த உரிமங்கள் பெறுவதில் சிக்கல் உள்ளதால், அரசின் உதவியை வேண்டி கோத்தகிரி பகுதி இளைஞர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தேயிலைத்தூளில் இருந்து ஒயின் தயாரித்து, அதில் வெற்றி கண்ட கிருஷ்ணாபுதூரை சேர்ந்த ஜான் ஹென்றி சிரில் என்ற இளைஞர் தற்போது பச்சை தேயிலை மூலம் சாக்லேட் தயாரித்து சாதனை படைத்து உள்ளார். நீலகிரியில் தயாரிக்கப்படும் பிற சாக்லேட் வகைகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதேபோல் கிரீன் டீ சாக்லேட் வகையும் அனைவரையும் கவரும் வகையில் இருக்கிறது. இதுகுறித்து ஜான் ஹென்றி சிரில் கூறியதாவது:-

விலை வீழ்ச்சியால் தேயிலை தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே தேயிலை மூலம் மாற்றுப்பொருள் தயாரிக்க முடியுமா? என்ற கோணத்தில் எடுத்த முயற்சியின் பலனாக ஒயின் மற்றும் சாக்லேட் தயாரிப்பு வெற்றி பெற்றுள்ளது. தோட்டங்களில் இருந்து தேயிலை கொழுந்துகளை பறித்து, அதிலிருந்து சாறு பிழிந்து, அதனை வெள்ளை சாக்லேட் பாருடன் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்தால் 4 சாக்லேட் வகைகளை தயாரிக்க முடியும். இவற்றை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். உடல் நலத்திற்கும் நன்மை பயக்கும். சாதாரணமாக கிரீன் டீ குடிப்பவர்கள் அதிலுள்ள பயன்களை சாக்லேட் மூலமும் பெறும் வகையிலும் தேயிலை சாறு விகிதத்தை அதிகப்படுத்தி மருத்துவ குணம் கொண்ட சாக்லேட்டுகளை தயாரிக்கலாம்.

இந்த வகை சாக்லேட் தயாரிப்புக்கு முறையாக உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி பெற்று, முதற்கட்டமாக நீலகிரி மாவட்டம் முழுவதும் விற்பனை செய்ய உள்ளேன். அதற்கு சந்தையில் கிடைக்கும் வரவேற்பை பொருத்து, தொழில் விரிவுபடுத்தப்படும். மேலும் வேலையின்றி தவிக்கும் இளைஞர்களுக்கு முறையாக பயிற்சி அளித்து, இதனை குடிசை தொழிலாக மேற்கொள்ள தேயிலை வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com