

தூத்துக்குடி,
ஏசுகிறிஸ்து பிறப்பு, கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. பண்டிகையையொட்டி தூத்துக்குடி நகரில் பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள், இளைஞர்கள், ஆலயங்கள் சார்பில் நேற்று முன்தினம் இரவு கேரல் பவனி நடத்தப்பட்டது. பவனியில் விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த கேரல் பவனி முக்கிய ரோடுகளின் வழியாக வலம் வந்தது. மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், இளைஞர்கள், சிறுவர்கள் நடனம் ஆடியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இந்த பவனியில் சிலர் தொடர்ந்து ஆடியபடி வந்தனர். இதனால் வ.உ.சி. மார்க்கெட் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த போலீசார் ஒரு கேரல் வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். அங்கு வந்தவர்களையும் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்துக்கு பிறகு மீண்டும் பவனி தொடர்ந்து நடந்தது.
நள்ளிரவில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தூத்துக்குடி சின்னக்கோவிலில் மறைமாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு கூட்டுத்திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அங்கு ஏசுபாலன் பிறந்ததை குறிக்கும் வகையில் கிறிஸ்து பிறப்பு குடில் திறக்கப்பட்டது. அப்போது மக்களும் வாழ்த்துப் பாடல்களை பாடினர்.
இதேபோன்று தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் பங்குதந்தை லெரின் டிரோஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஆலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. கிறிஸ்தவ மக்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இரவில் மக்கள் ஆலயங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தனர்.