சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் துப்பாக்கியுடன் பிடிபட்ட வாலிபரால் பரபரப்பு

சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் துப்பாக்கியுடன் பிடிபட்ட வாலிபரால் பரபரப்பு உண்டானது.
சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் துப்பாக்கியுடன் பிடிபட்ட வாலிபரால் பரபரப்பு
Published on

மும்பை,-

பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரித்து இருந்தது. இதனால் ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது நீண்ட தூர ரெயில்கள் புறப்படும் ஒரு பிளாட்பாரத்தில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டு இருந்தார்.

இதை கவனித்த போலீசார் வாலிபரை பிடித்து அவர் வைத்திருந்த உடைமைகளில் சோதனை செய்தனர். இதில் அவர் வைத்திருந்த ஒரு பைக்குள் துப்பாக்கி, சிறிய கியாஸ் சிலிண்டர் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு உண்டானது.

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், அவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த கிஷோர் (வயது21) என்பது தெரியவந்தது. மேலும் மும்பையில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ரெயிலில் வந்ததாக அவர் கூறினார்.

அவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது? ரெயிலில் கியாஸ் சிலிண்டருடன் ஏன் பயணம் செய்தார். என்பது குறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் போலீசார் அவரை ரெயில்வே கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com