மும்பை உள்பட 14 மாவட்டங்களில் தியேட்டர்கள், உணவகங்கள் 100 சதவீத திறனுடன் செயல்பட அனுமதி

மும்பை உள்பட 14 மாவட்டங்களில் திரையரங்குகள், உணவகங்கள் 100 சதவீத திறனுடன் செயல்ட அரசு அனுமதி அளித்துள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

மும்பை,

மும்பை உள்பட 14 மாவட்டங்களில் திரையரங்குகள், உணவகங்கள் 100 சதவீத திறனுடன் செயல்ட அரசு அனுமதி அளித்துள்ளது.

சரிந்த கொரோனா பாதிப்பு

மராட்டியத்தில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. இதனால் மராட்டியத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

இந்த வகையில் மாநிலத்தில் உள்ள 36 மாவட்டங்களில் மும்பை உள்பட 14 மாவட்டங்களில் வணிக வளாகங்களில், உணவகங்கள், சினிமா அரங்குகள் மற்றும் திரையரங்குகளில் 100 சதவீத திறனுடன் செயல்பட மராட்டிய அரசு அனுமதித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தடுப்பூசி அதிகரிப்பு

மராட்டியத்தில் மும்பை நகர், மும்பை புறநகர், புனே, பந்தாரா, சிந்துதுர்க், நாக்பூர், ராய்காட், வார்தா, ரத்னகிரி, சத்தாரா, சாங்கிலி, கோண்டியா, சந்திரப்பூர் மற்றும் கோலாப்பூரில் குறைந்தபட்சம் 90 சதவீதம் பேர் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர்.

மேலும் மேற்குறிப்பிட்ட 14 மாவட்டங்களில் கொரோனா நேர்மறை விகிதம் 10 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும் ஆக்சிஜன் உதவியுடன் அல்லது ஐ.சி.யு. படுக்கையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

100 சதவீத அனுமதி

எனவே அப்பகுதிகளில் சமூக, விளையாட்டு, போழுதுபோக்கு, கல்வி, கலாசாரம், மதம், அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள். திருவிழாக்கள், திருமணம் மற்றும் இறுதி சடங்குகள் போன்ற பிற கூட்டம் கூடும் இடங்களில் 50 சதவீத வருகை திறனுடன் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

இருப்பினும் 1,000 பேருக்கு மேல் கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்பட்டால் இதுகுறித்து மாவட்ட பேரிடர் மேலான்மை ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும் அந்த 14 மாவட்டங்களில் அனைத்து வணிக வளாகங்கள், திரையரங்குகள், உணவகங்கள் மற்றும் பார்கள், உள் விளையாட்டு அரங்குகள், ஜிம்கள், ஸ்பாக்கள், நீச்சல் குளங்கள், மத வழிபாட்டு தலங்கள், நாடக அரங்குகள், சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்ககள் போன்றவை 100 சதவீத திறனுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

22 மாவட்டங்கள்

இந்த பட்டியலில் இருந்து விடுபட்ட பிற 22 மாவட்டங்களில் மேற்குறிப்பிடப்பட்ட இடங்கள் 50 சதவீத திறனுடன் செயல்படும். பொழுதுபோக்கு, கல்வி, கலாசாரம், மதம், அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்கள் 50 சதவீத திறனுடன் அல்லது 200 பேர் இதில் எது குறைவோ அந்த வரம்பிற்குள் நடத்தப்பட வேண்டும்.

மாநில சுகாதாரத்துறை மற்றும் அரசின் கொரோனா பணிக்குழுவின் தகவல்கள் அடிப்படையிலும், தற்போதைய தொற்று நோய் நிலைமையை கருத்தில் கொண்டும் இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com