சிராவயல் மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 82 பேர் காயம்

திருப்பத்தூர் அருகே சிராவயலில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 82 பேர் காயமடைந்தனர்.
சிராவயல் மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 82 பேர் காயம்
Published on

திருப்பத்தூர்,

தென் தமிழக மஞ்சுவிரட்டுகளில் மிகவும் புகழ்வாய்ந்ததும் சுமார் 80 ஏக்கர் பரப்பளவு உள்ள மஞ்சுவிரட்டுத் திடல் அமையப்பெற்றுள்ளது சிராவயலில் தான். ஆண்டு தோறும் தை மாதம் 3-ம் நாள் மஞ்சுவிரட்டு நடைபெறும். காலையில் கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று, முன்னோர் வழிபாடு செய்து நாட்டார்களை அழைத்து கொண்டு மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவிற்கு வந்தனர். அதனை தொடர்ந்து தொழுவில் உள்ள அனைத்து காளைகளுக்கும் மரியாதை செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் மஞ்சுவிரட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. மொத்தம் 101 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 61 மாடு பிடிவீரர்கள் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கும் தங்கக்காசு, அண்டா, குத்துவிளக்கு ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது.

முன்னதாக சிராவயல் பகுதிகளில் காலை முதல் மஞ்சுவிரட்டிற்கு சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், அறந்தாங்கி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 1000-க்கும் மேற்பட்ட காளைகள் சிராவயல் பொட்டல், கம்பனூர் பரணி கண்மாய், தென்கரை கண்மாய் கும்மங்குடி பொட்டல் உள்ளிட்ட இடங்களில் கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டன. இதில் களைகள் முட்டியதில் 82 பேர் காயமடைந்தனர்.

இதில் காயமடைந்தவர்களுக்கு பொட்டலில் உள்ள மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 30-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் 14 பேர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மஞ்சுவிரட்டு விழாவில் திருப்பத்தூர் எம்.எல்.ஏ. கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம், திருப்பத்தூர் வட்டாட்சியர் ஜெயலெட்சுமி, ஊர் அம்பலக்காரர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த மஞ்சுவிரட்டை காண வெளிநாட்டினரும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் சிராவயல் பகுதியில் திரண்டிருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com