

பரமத்தி வேலூர்,
பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வெங்கமேட்டில் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கணினி பயன்பாட்டு பயிற்சி, ஆங்கிலத்தில் பேசுவது, எழுதுவது ஓவியப்பயிற்சி, மாலை நேர சிறப்பு வகுப்புகள், சுற்றுச்சூழலில் மாணவ, மாணவிகள் பங்கு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் 234 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 9 ஆசிரிய, ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேவையான பேனா, பென்சில், நோட்டு உள்ளிட்ட கல்வி சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை பொருட்களை பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.
முன்னதாக பெற்றோர், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஊர்வலமாக பள்ளிக்கு வந்தனர். பள்ளி அருகே தொடங்கிய இந்த ஊர்வலம் கபிலர்மலை சாலை, பழைய தேசிய நெடுஞ்சாலை, 4 ரோடு மற்றும் பொத்தனூர் சாலை வழியாக சென்று பள்ளியை வந்தடைந்தது.
பின்னர் நடைபெற்ற கூட்டத்திற்கு கபிலர்மலை உதவி தொடக்கக்கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை மாலதி வரவேற்று பேசினார். விழாவில் பொத்தனூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் நாராயணன், புகழூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் முனுசாமி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் மாரப்பன், பள்ளி மேலாண்மைக்குழுத்தலைவி கனகமணி, முன்னாள் மாணவர் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.