காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நயினார்கோவிலில் பொதுமக்கள் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நயினார்கோவிலில் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நயினார்கோவிலில் பொதுமக்கள் உண்ணாவிரதம்
Published on

நயினார்கோவில்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகள் மற்றும் கர்நாடக அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தியும் பரமக்குடி தாலுகா நயினார்கோவிலில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு பி.கொடிக்குளம் ராஜேஸ் தலைமை தாங்கினார். நயினார்கோவில் இந்திரகுமார் மற்றும் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரியன்கோட்டை வெங்கடேஷ், கரைமேல்குடியிருப்பு ராஜகோபாலன், நயினார்கோவில் மணிகண்டன் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பொதுமக்கள் பேசியதாவது:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய -மாநில அரசுகள் மற்றும் கர்நாடக அரசு தமிழக மக்களை வஞ்சிக்கின்றன. ஒரே நாட்டில் வாழும் எங்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் இடையே அரசியல் கட்சிகள் பிரிவினையை ஏற்படுத்துகின்றன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தாமல் தமிழக மக்களை வஞ்சிக்கும் மத்திய அரசை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்.

50 ஆண்டுகளாக மத்திய அரசும், தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகளும் காவிரி பிரச்சினையை தீர்க்கவில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கரிகாலன் கல்லணையை காட்டினார். நமது அரசியல்வாதிகள் அணைகள் கட்டியிருந்தால் கடலில் வீணாகி கலக்கும் தண்ணீரை சேமித்திருக்கலாம். இவ்வாறு அவர்கள் பேசினர். உண்ணாவிரத போராட்டத்தில் அரசியல் கட்சியினர் கரை வேட்டிகளுடன் கலந்துகொள்ள அனுமதியில்லை என்று கூறப்பட்டிருந்ததால் அனைவரும் சாதாரண உடையில் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com