குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரித்தது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

பிரதமரும், உள்துறை மந்திரியும் இந்திய மக்களுக்கு எந்தவித பாதிப்பு இல்லை என்று கூறியதால் குடியுரிமை திருத்த மசோதாவை நாங்கள் ஆதரித்தோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரித்தது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
Published on

திருவொற்றியூர்,

சென்னை ராயபுரத்தில் தமிழக அரசின் சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு 1,935 பேருக்கு தாலிக்கு தங்கத்துடன், தனது சொந்த செலவில் புடவைகளையும் வழங்கினார்.

இதில் மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா, சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி, மாநகராட்சி துணை கமிஷனர் மதுசூதனன்ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் 2021-ல் கட்சி ஆரம்பிப்பது சந்தேகமே?. கராத்தே தியாகராஜனும், தமிழருவி மணியனும் அவரை எப்படியாவது அரசியலுக்கு இழுத்து வந்துவிடவேண்டும் என பேசுகிறார்கள். யார் கட்சி ஆரம்பித்தாலும் சரி, எந்த இயக்கம் என்றாலும் எங்களை மிஞ்ச யாரும் இல்லை என்பதை நான் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

தி.மு.க.வுக்கு பிடிக்காத வார்த்தை தேர்தல். 2021 தேர்தலுக்கு பிறகு தி.க.வைப்போல் தி.மு.க.வும் பகுத்தறிவு கொள்கைகளை விளக்கும் ஒரு இயக்கமாக மாறிவிடும். இதனால்தான் தேர்தலை எப்படியாவது நிறுத்துவதற்காக உச்சநீதிமன்றத்தை நாடினர். அங்கு தலையில் குட்டு விழுந்தது. 17 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த அவர்கள், தமிழக மக்களுக்காக என்ன செய்தார்கள்?.

நாங்கள் தி.மு.க.வை பற்றி பேசினால் அவர்கள் தனிப்பட்ட முறையில் எழுதுவதும், பேசுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. நாங்கள் ஒன்றும் கோழைகள் அல்ல.

இலங்கை தமிழர்களுக்கு தேவை இரட்டை குடியுரிமைதான். ஜெயலலிதா காலத்திலேயே நாங்கள் பொதுக்குழுவில் இதுபோன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளோம். இந்திய பிரதமரும், உள்துறை மந்திரியும் இந்திய மக்களுக்கு எந்தவித பாதிப்பு இல்லை என்று கூறியதால் குடியுரிமை திருத்த மசோதாவை நாங்கள் ஆதரித்தோம்.

எங்களது கூட்டணி கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. மாவட்ட அளவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவில் தனது எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய உடற்பயிற்சி கூடம் மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா கட்டுவதற்கான பூமி பூஜையை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

இதில் சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை 4-வது மண்டல அதிகாரி (பொறுப்பு) காமராஜ், செயற்பொறியாளர் புவனேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி பொறியாளர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com