சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பொதுமக்கள்

சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பொதுமக்கள்
Published on

நாமக்கல்,

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் முத்துக்காபட்டி ஊராட்சி பெருமாம்பாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பெருமாம்பாளையம் அருந்ததியர் காலனியில் 500 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறோம். இந்த குடியிருப்புக்கு ஊராட்சி நிர்வாகம் 3 மாதங்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்குகிறது. இதனால் ஒரு குடம் தண்ணீரை ரூ.10 விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

முத்துக்காபட்டி ஊராட்சிக்கு கொல்லிமலை அடிவாரம் புதுக்கோம்பையில் இருந்து ஆழ்துளை கிணறு மூலமும், மோகனூரில் இருந்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு குடிநீர் திட்டங்களின் மூலம், அருந்ததியர் காலனிக்கு வரும் பகிர்மான குழாய்களில் வால்வுகள் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் இங்கு தண்ணீர் வருவதில்லை. மேதரமாதேவி, முத்துக்காபட்டி, பெருமாபாளையம் பகுதிகளுக்கு குடிநீர் வரும் நிலையில் அருந்ததியர் காலனிக்கு தண்ணீர் வருவதில்லை.

சீரான குடிநீர் வினியோகம்

இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் பலமுறை நேரில் வலியுறுத்தியும் பலன் இல்லை. இதனால் புதுக்கோம்பையில் இருந்து பெருமாபாளையம் அருந்ததியர் காலனிக்கு தனியாக குழாய் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யவும், காலனியில் பழுதாகி உள்ள 2 மினி டேங்கிற்கும் உரிய மின் மோட்டார்களை பழுதுநீக்கி, தட்டுப்பாடு இன்றி சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

குடிநீர் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி, கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திரண்டு வந்த சம்பவம் நேற்று சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com