மதுக்கடைகள் திறந்த முதல்நாளே கோஷ்டி மோதல்; மோட்டார் சைக்கிள்கள் உடைப்பு

புதுச்சேரியில் மதுக்கடைகள் திறந்த முதல்நாளே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 5-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன.
மதுக்கடைகள் திறந்த முதல்நாளே கோஷ்டி மோதல்; மோட்டார் சைக்கிள்கள் உடைப்பு
Published on

புதுச்சேரி,

புதுவையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. கடந்த 2 மாதங்களாக மதுக்கடைகள் திறக்கப்படாததால் நேற்று காலை முதலே மது கடைகளில் கூட்டம் அலைமோதியது. மது குடித்து விட்டு போதை மயக்கத்தில் சிலர் தகராறில் ஈடுபட்டனர். மேலும் சிலர் வாகனங்களை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்துகளில் சிக்கினர்.

இதன் காரணமாக நேற்று மாலை அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவில் ரத்த காயங்களுடன் பலர் சிகிச்சை பெற வந்தனர். இதற்கிடையே நகரப் பகுதியில் இளைஞர்கள் சிலர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர்.

அதாவது ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று மாலை ராசு உடையார் தோட்டம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பிரான்சுவா தோட்டம் பகுதிக்கு சென்று ரகளையில் ஈடுபட்டனர். அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களும் திரண்டு வந்து மோதலில் ஈடுபட்டனர். இருதரப்பினரும் கோஷ்டிகளாக உருட்டுக்கட்டை, கிரிக்கெட் மட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பாபு என்பவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

பன்னீர் என்பவரது வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியது. மேலும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 5-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை தடியால் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது. இந்த கோஷ்டி மோதலால் அப்பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்து ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜீத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். தாசில்தார் ராஜேஷ்கண்ணா, துணை தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோரும் அங்கு வந்தனர்.

கோஷ்டி மோதல் சம்பவத்தால் ராசு உடையார் தோட்டம், பிரான்சுவா தோட்டம் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com