தொண்டி அருகே, கொடிபங்கு வாக்குச்சாவடியில் கோஷ்டி மோதல்; போலீஸ் குவிப்பு

தொண்டி அருகே கொடிபங்கு வாக்குச்சாவடியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
தொண்டி அருகே, கொடிபங்கு வாக்குச்சாவடியில் கோஷ்டி மோதல்; போலீஸ் குவிப்பு
Published on

தொண்டி,

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ளது கொடிபங்கு கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என போலீசாரால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி இங்கு தேர்தல் பணியில் நுண்கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் என்பவர் கூடுதலாக பணியமர்த்தப்பட்டு இருந்தார்.

நேற்று பகலில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும் போது நுண்கண்காணிப்பாளர் வாக்காளர்களிடம் இருந்து வாக்குச்சீட்டுகளை வாங்கி மடித்து பெட்டியில் போட்டதாக பிரச்சினை எழுந்துள்ளது. மேலும் ஒரு தரப்பு வேட்பாளருக்கு அவர் ஆதரவாக செயல்படுவதாக கூறி வாக்குச்சாவடி மையத்திற்குள் மற்றொரு தரப்பு வேட்பாளரின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வேட்பாளர்களின் முகவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அதனைத்தொடர்ந்து வாக்குச்சாவடிக்கு வெளியே 2 வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.

இதனால் அங்கு கோஷ்டி மோதல் உருவானது. இதில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் காயமடைந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. இந்த நிலையில் 2 வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் அதிக அளவில் வாக்குச்சாவடி முன்பு குவிந்ததால் கிழக்கு கடற்கரை சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அங்கு பணியில் இருந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு திருவாடானை தாசில்தார் சேகர், போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், தேர்தல் நடத்தும் அலுவலர் உம்முல் ஜாமியா மற்றும் மண்டல தேர்தல் அலுவலர்கள் விரைந்து சென்று அந்த வாக்குச்சாவடி மையத்தில் பிரச்சினை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது இருதரப்பினரும் மீண்டும் மோதிக்கொள்ளும் சூழல் உருவானதால் போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த சிலரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் அந்த பகுதியில் கூடியிருந்தவர்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர். மேலும் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பின்னர் அங்கு பணியில் இருந்த நுண்கண்காணிப்பாளர் அந்த வாக்குச்சாவடி மையத்தில் இருந்து மாற்றப்பட்டு காத்திருப்பில் வைக்கப்பட்டார். இந்த அமளியால் அந்த வாக்குச்சாவடி மையத்தில் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு பின்னர் போலீசார் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com