அம்பத்தூர் ஏரியை தூய்மைப்படுத்தும் பணி மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் அம்பத்தூர் ஏரியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அம்பத்தூர் ஏரியை தூய்மைப்படுத்தும் பணி மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்
Published on

அம்பத்தூர்,

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட அம்பத்தூர் ஏரி, சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். அம்பத்தூர், அயப்பாக்கம் உள்ளிட்ட பகுதியின் நிலத்தடிநீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்குகிறது. தற்போதும் இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பி காட்சி அளிக்கிறது.

இந்த ஏரியை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் இருந்து கழிவுநீர், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், மதுபாட்டில்கள் ஏரியின் கரையோரம் கொட்டப்பட்டு வருவதால் ஏரி தண்ணீர் மாசுபட்டு வருகிறது.

இந்தநிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சியும், தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து நேற்று அம்பத்தூர் ஏரியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மண்டல உதவி ஆணையாளர் பாலசுப்பிரமணியம், சென்னை மாநகராட்சியின் சுகாதார கல்வி அதிகாரி டாக்டர் சீனிவாசன் ஆகியோர் இந்த பணியை தொடங்கி வைத்தனர்.

மாநகராட்சி ஊழியர்கள் 100 பேர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் 50 பேர் மற்றும் மாநகராட்சி சுகாதார விழிப்புணர்வு பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

ஒரே நாளில் அம்பத்தூர் ஏரிக்கரையோரம் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள், எருக்கஞ்செடி, ஆகாயத்தாமரைகள், பாட்டில்கள் உள்பட 9 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு, ஏரியின் கரையோரம் ஓரளவு தூய்மைப்படுத்தப்பட்டது.

ஆனால் ஏரியின் உட்புறமும் இதே அளவுக்கு குப்பை கழிவுகள், பெருமளவு ஆகாயத்தாமரைகள் உள்ளன. அவற்றை ஏரியை பராமரிக்கும் பொதுப்பணி துறையினர் அகற்றி ஏரியை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுபற்றி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, வாரத்தில் ஒரு நாள் பொது ஏரிகளை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படும். ஏரியை சுற்றி உள்ள குடியிருப்புவாசிகள் ஏரியை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இதற்காக அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து, துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்படும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com