

குடியாத்தம்,
குடியாத்தம் பகுதியில் குடியாத்தம் கிரீன் டவுன் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு நகரை பசுமையாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த அமைப்பின் மூலம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரியில் பெரும்பாலான சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.
இதனை தொடர்ந்து குடியாத்தம் கவுண்டன்ய மகாநதியை தூய்மைப்படுத்தும் பணி நேற்று தொடங்கப்பட்டது. நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, அரசு வக்கீல் கே.எம்.பூபதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வி.ராமு, முன்னாள் நகரமன்ற தலைவர் எம்.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகாநதியை தூய்மைப்படுத்தும் பணியை கே.எம்.ஜி. கல்லூரி செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
இந்த பணியின் மூலம் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் முட்புதர்களை அகற்றி, கால்வாய்களை தூர்வாரி பசுமையாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்பாடுகளை குடியாத்தம் கிரீன் டவுன் நிர்வாகிகள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.