ஊட்டியில் காலநிலை மாற்றம்: கடுங்குளிர் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் அவதி

ஊட்டியில் காலநிலை மாற்றத்தால் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து உள்ளனர்.
ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிரை போக்க உல்லன் ஆடைகள் அணிந்து இருந்ததை படத்தில்
ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிரை போக்க உல்லன் ஆடைகள் அணிந்து இருந்ததை படத்தில்
Published on

கடுங்குளிர்

மலை மாவட்டமான நீலகிரியில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனி காலம் நிலவுகிறது. இந்த மாதங்களில் உறைபனி தாக்கம் அதிகமாக காணப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு உறைபனி தாக்கம் காணப்பட்டாலும், காலநிலை மாற்றத்தால் அவ்வப்போது மழை பெய்தது.

இந்த நிலையில் நேற்று ஊட்டி நகரில் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததோடு, தொடர்ந்து பனிமூட்டம் நிலவியது. அவ்வப்போது சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் கடுங்குளிர் நிலவியது. இதனால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் குளிரை போக்க தொப்பி, உல்லன் ஆடைகள், கையுறைகளை அணிந்து இருந்தனர்.

சுற்றுலா பயணிகள் அவதி

கொட்டும் மழையிலும் பூங்காவை அவர்கள் கண்டு ரசித்தனர். மழையில் நனைந்தபடி புகைப்படம் எடுத்து கொண்டனர். அத்துடன் கடுங்குளிர் காரணமாக சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். பொது மக்கள் வீடுகளில் சூடான தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.

மலை உச்சியில் உயரமான இடங்களில் வசிப்பவர்கள் குளிரால் எந்நேரமும் உல்லன் ஆடைகளை அணிந்து உள்ளனர். ஊட்டியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 12.8 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது.

புத்தாண்டையொட்டி தொடர் விடுமுறை காரணமாக கடந்த 1-ந் தேதி 5,967 பேர், 2-ந் தேதி 6,573 பேர், நேற்று முன்தினம் 6,604 பேர் என மொத்தம் 19 ஆயிரத்து 144 பேர் ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்தனர். ஊட்டி படகு இல்லத்துக்கு 15 ஆயிரம் பேர் வந்தது குறிப்பிடத்தக்கது.

மழையளவு

நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

ஊட்டி-1, குன்னூர்-15, குந்தா-6, அவலாஞ்சி-9, உலிக்கல்-20 உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 101.8 மி.மீ. மழை பதிவானது. இதன் சராசரி 3.51 மி.மீ. ஆகும்.

ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனால் நன்கு காய்ச்சிய தண்ணீரை குடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com