பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளர்கள் போராட்டம்

பொன்னேரி அருகே தனியாருக்கு சொந்தமான நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 4 தொழிலாளர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளர்கள் போராட்டம்
Published on

பொன்னேரி,

பொன்னேரி அருகே பஞ்செட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் அனல் மின் நிலையங்களுக்கு கொதிகலன்கள் உற்பத்தி செய்து வினியோகம் செய்யப்படுகிறது. இந்த கம்பெனியில் 3 தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தனியார் ஒப்பந்த நிறுவனங்களில் 127 பேர் தற்காலிக தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு 13 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தக்கோரி சாலை மறியல், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களில் தொழிலாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து, நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நேற்று காலை திடீர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு பணிநீக்கம் செய்யப்பட்ட அன்பு (32), மதன் (23), ஹரி (33), கமல் (25) ஆகிய 4 பேரும் அங்குள்ள செல்போன் கோபுரத்தில் திடீரென்று ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும், பொன்னேரி போலீஸ் உதவி சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி, கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத், பொன்னேரி கோட்டாட்சியர் நந்தகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, செல்போன் கோபுரத்தில் ஏறிய 4 பேரும் சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு கீழே இறங்கி வந்தனர்.

இதையடுத்து, அதிகாரிகள், நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், தொழிலாளர்கள் தனியார் நிறுவனம் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com